கலாப்பிரியா நிகழ்ச்சி – கவிஞர் வா.மணிகண்டன்

கலாப்ரியா படைப்புக்களம் – நிகழ்வுக் குறிப்புகள் – சொல்வனம் இதழ் http://solvanam.com/?p=8451

kalapriyaவிஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஒருங்கிணைக்கும் கலாப்ரியா படைப்புகள் பற்றிய நிகழ்ச்சியில் நான் கலாப்ரியாவின் கவிதைகள் குறித்துப் பேசுவதாக நண்பர் செல்வேந்திரனுடன் உரையாடி முடிவு செய்த போதே கலாப்ரியாவின் கவிதைத் தொகுப்பினை தேட ஆரம்பித்துவிட்டேன். என்னிடம் கலாப்ரியாவின் வனம்புகுதல்,அனிச்சம் இரண்டு தொகுப்புகள்தான் இருந்தன. கவிதைகளின் மொத்தத் தொகுப்பு இல்லை. மொத்தத் தொகுப்பு காவ்யா பதிப்பகத்தில் ஒன்று வந்திருக்கிறது. தமிழினி பதிப்பகத்தில் இருந்து இன்னொன்று. ஆனால் இரண்டுமே இப்பொழுது கடைகளில் கிடைப்பதில்லை என்று சொன்னார்கள். நண்பர்களிடம் விசாரித்த வரையிலும் கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லாதது போன்று தோன்றியது. வேறு வழியில்லாமல் கலாப்ரியாவிடமே கேட்டேன். தனக்குத் தெரிந்து பெரும்பாலான நூலகங்களிலும் கிடைக்கும் என்றார். கரட்டடிபாளையம் நூலகத்தில் புத்தகங்கள் மிகக் குறைவு. அங்கு தேடியதில் எடுக்கமுடியவில்லை. கோபிச் செட்டிபாளையம் நூலகத்தில் நகுலன்,ஆத்மாநாம்,கல்யாண்ஜி தொகுப்புகளை எல்லாம் கண்டுபிடித்துவிட்டேன் ஆனால் கலாப்ரியா மட்டும் தப்பிவிட்டார். நகுலன் வரலாற்று நூல்கள் பகுதியிலும், ஆத்மாநாம் அறிவியல் பகுதிகளிலும் குடியிருந்தார்கள்.

எழுத்தாளர் பாவண்ணன் ஆபத்வாந்தவன் ஆனார். அட்டையிடப்பட்டு நுனி மடங்காமல் வாசிக்கப்பட்ட தன் ஆயிரக்கணக்கான புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கும் அலமாரியிலிருந்து கலாப்ரியாவின் கவிதைத் தொகுப்பினை எடுத்து வைத்திருந்தார். அலுவலகம் முடித்துவிட்டு அல்ஸூரில் இருக்கும் அவர் வீட்டுக்குச் சென்று வாங்கிக் கொண்டேன். காவ்யா பதிப்பக வெளியீடு அது. புத்தகம் முழுவதுமே மிக மோசமான பிரசுர வேலைகள். ஏகப்பட்ட தவறுகளும் அச்சுப் பிழைகளும். அந்தப் பிரசுர குறைகளைப் பற்றியே ஒரு தனிக்கட்டுரை எழுதிவிட முடியும்.

புத்தகம் கையில் கிடைத்த சமயத்தில் இருந்தே இரவு பகலாக கவிதைகளை படித்துக் கொண்டிருந்தேன். பள்ளி, கல்லூரி பொதுத்தேர்வுகளுக்கு பிறகு நான் இத்தனை சிரத்தையாக படித்தது இப்பொழுதுதான் என்று தோன்றுகிறது.

சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு நண்பர் செல்வேந்திரன் தொலைபேசியில் அழைத்து ஞாயிறு காலையில் நடக்கவிருக்கும் ‘கலாப்ரியா படைப்புக்களம்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள படைப்பாளிகள் கோவை வந்துவிட்டதாகத் தெரிவித்தார். கோபியில் இருந்து கோவைக்கு இரண்டு மணிநேரப் பயணம் தான் என்பதால் நான் காலையில் கிளம்பிவருவதாகச் சொன்னேன்.அடுத்த நாள் காலையில் நான்கு மணிக்கு எழுந்துவிட்டேன். கோபியிலிருந்து கோயமுத்தூருக்கு பயணத்தில் எத்தனை சிக்கல் வந்தாலும் கூட அதிகபட்சமாக மூன்று மணிநேரம் தான் ஆகும். ஆனால் நான் 5 மணிக்கு எல்லாம் கிளம்பத் தயாராகிவிட்டேன். நான் கூட்டத்தில் பேசப் போகிறேன் என்று என்னால் சுலபத்தில் வீட்டில் நம்ப வைக்க முடியவில்லை. நாஞ்சில் நாடன் தலைமை ஏற்கிறார் என்ற போது ‘இப்படியெல்லாமா பேர் வைப்பாங்க’ என்று அம்மா தன் சந்தேகத்தை தீர்க்க முயன்று கொண்டிருந்தார்.

ஞாயிறு காலையில் கோவை காந்திபுரம் கெளரிசங்கர் ஹோட்டலில் பொங்கல் வடைக்கு காத்திருந்த போது சுகுமாரன் தொலைபேசியில் அழைத்தார். உற்சாகமாக விழுங்கிவிட்டு ஆர்.எஸ்.புரம் சன்மார்க்க சங்கம் சென்றிருந்த போது யாரும் வந்திருக்கவில்லை. அருண் தனியாகத் தட்டி கட்டிக் கொண்டிருந்தார். ஒன்பதே முக்கால் மணிவாக்கிலிருந்து வாசகர்கள் வரத்துவங்கினார்கள். நாஞ்சில்நாடன் முதலில் வந்தார். பத்து மணியளவில் மற்ற படைப்பாளிகள் வந்து சேர்ந்தார்கள். கொஞ்ச நேரம் வாசகர்களும் படைப்பாளிகளும் வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். கூட்டம் பத்தரை மணியளவில் ஆரம்பமானது.

நிகழ்ச்சியின் தொகுப்பாளரான செல்வேந்திரன் விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் தொடக்கம் நோக்கம் பற்றி பேசினார். விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஜெயமோகனை மையப்புள்ளியாக வைத்து அவரது வாசகர்களால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு என்றும் இலக்கியப்பரப்பில் தொடர்ந்து இயங்குவதற்கான முடிவுகளுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

முதலில் செல்வி.இல.கனகலட்சுமி வரவேற்றார். இவர் கோவையில் இருந்து வெளிவரும் நமது நம்பிக்கை என்ற புத்தகத்தில் உதவி ஆசிரியர். பட்டிமன்றங்களில் பேசுவாராம். இது கலாப்ரியாவுக்கு பாராட்டுவிழா என்றுதான் பேச்சைத் தொடங்கினார். படைப்புக்களம் என்று குறிப்பிட்டால் அது பாராட்டும் விமர்சனமும் சார்ந்த நிகழ்வு. பாராட்டுவிழா என்றால் அது முடிந்தவரையில் எதிர்நிலைக் கருத்துக்கள் குறைவாக இருக்கும் நிகழ்வு என்பதுதான் என் புரிதல் என்பதால் சற்று குழப்பமடைந்தேன். கனகலட்சுமி வந்திருந்தவர்களை எல்லாம் பாராட்டி வரவேற்றார்.

நாஞ்சில்நாடன் தலைமை உரையை நிகழ்த்தினார். கொஞ்சநேரமே பேசப் போவதாகச் சொல்லி பேச ஆரம்பித்தவர், எழுபத்தைந்துகளில் தான் எழுத வந்த போது வண்ணதாசன், வண்ணநிலவன் போன்றவர்களோடு சேர்த்து கலாப்ரியாவையும் வாசித்தது பற்றிப் பேசினார். நாஞ்சில்நாடனுக்கு சற்று கோபம் அதிகம் என்று எனக்கு அவ்வப்போது தோன்றும். இந்த நிகழ்விலும் தோன்றியது. தமிழகத்தில் வழங்கப்படும் விருதுகள் பற்றியும், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றியும் சற்று காட்டமாகவே பேசினார். வரலாறுகளை சரியாக பதிவு செய்பவன் படைப்பாளி மட்டுந்தான் என்று அவர் சொன்னது நினைவில் இருக்கிறது.

நாஞ்சில் நாடன் பேசி முடித்தவுடன் என்னை அழைத்தார் செல்வேந்திரன். நான் இலக்கிய மேடைகளில் பேசுவது இதுவே முதல் முறை. ஆனால் வேறு மேடைகளில் பேசிய பழக்கமிருக்கிறது. விசுவின் அரட்டை அரங்கத்தில் பேசியிருக்கிறேன். ஆனால் அந்த முன் அனுபவங்கள் எல்லாம் உதவி செய்யவில்லை. எனது அடிப்படையான பயம் நான் கலாப்ரியா கவிதைகள் குறித்தான சில எதிர்மறை கருத்துக்களை இந்தக் கூட்டத்தில் முன் வைக்கப் போகிறேன் என்பதுதான். கீழே அமர்ந்திருந்த அத்தனை பேரும் என்னை முறைப்பதாகவே பட்டது. எனக்குச் சரியாக ஞாபகம் இருக்குமானால் ஒரே ஒருவர் மட்டும் என்னைப் பார்த்து சிரித்தார். பாதி பேசியிருக்கும் போது பேச்சு கோர்வையாக வரவில்லை என்பதனை உணர்ந்தேன். இனி பேசுவது சரிப்படாது என்று உணரத்துவங்கிய சமயம் கையில் வைத்திருந்த கட்டுரையை வாசித்துவிட்டேன். தமிழ்க் கவிதையில் எளிமையோடும், நேரடித்தன்மையோடும் இருக்கும் தனித்துவக் குரல் கலாப்ரியாவினுடையது என்பதும், தொண்ணூறுகளுக்குப் பிறகாக தமிழ்க்கவிதைகளில் நிகழ்ந்த மாறுதல் கலாப்ரியாவின் கவிதைகளில் இல்லாமல் இருப்பது கவிதை வாசகர்களுக்கு பெரும் இழப்பு என்பதும், தமிழ்க் கவிதை கலாப்ரியாவை தாண்டிச் சென்றிருக்கிறது என்றாலும் தமிழ்க் கவிதை வரலாற்றில் கலாப்ரியாவின் இடம் மிக முக்கியமானது அதே சமயம் நிரந்தரமானது என்பதும் என் பேச்சின் அடிப்படை. பேசி முடித்துவிட்டு அமர்ந்தவுடன், நாஞ்சில் நாடன் என்னிடம் ‘கடைசி வரி பிரமாதம். நான் என்ன சொல்கிறேன் என்று புரிகிறதா?’ என்றார். புரிந்தது என்று மூன்று முறை தலையாட்டினேன்.

உரையாற்றும் வா.மணிகண்டன் (மேடையில் கவிஞர் சுகுமாரன், நாஞ்சில் நாடன், கலாப்ரியா, அ.வெண்ணிலா, ஜெயமோகன், மரபின் மைந்தன் முத்தையா)உரையாற்றும் வா.மணிகண்டன் (மேடையில் சுகுமாரன், நாஞ்சில்நாடன், கலாப்ரியா, அ.வெண்ணிலா, ஜெயமோகன், மரபின் மைந்தன் முத்தையா)

கவிஞர் வெண்ணிலா வந்தவாசியிலிருந்து வந்திருந்தார். கலாப்ரியாவின் கவிதைகளோடான தனது உணர்வு ரீதியான தொடர்பினைப் பேசினார். கலாப்ரியாவின் பல கவிதைகள் பெண்களுக்கு தர வேண்டிய மரியாதையை தராமல் இருப்பதாகச் சொன்னார். தன் வாழ்வில் கிடைத்திடாத பரந்துபட்ட வாழ்வியல் அனுபவங்களின் காரணமாகவோ எதுவோ தன்னால் பல கலாப்ரியாவின் கவிதைகளை முழுமையாக உள்வாங்க முடியவில்லை என்பது பற்றியும் பேசினார். கலாப்ரியாவின் கவிதைகளில் தென்படும் தனித்துவம் பற்றிச் சொல்லிவிட்டு, கலாப்ரியாவின் கவிதைகளை மறுவாசிப்பு செய்யும் போது தான் பெறும் அனுபவங்கள் பற்றி அவர் பேசியது முக்கியமானதாகப் படுகிறது.

வெண்ணிலாவைத் தொடர்ந்து மரபின் மைந்தன் முத்தையா பேசினார். இவர் பட்டிமன்றப் பேச்சாளர். நமது நம்பிக்கை, ரசனை என்ற இரு இதழ்களின் ஆசிரியர். இரண்டு இதழ்களுமே கோவையிலிருந்தே வெளிவருகின்றன. கலாப்ரியாவின் கவிதைகளில் காணப்படும் காட்சி நுட்பம், குழந்தைகள் அல்லது குழந்தமை என்பது பற்றிப் பேசினார்.

நிறையக் கவிதைகளைச் சுட்டிக் காட்டி அந்தக் கவிதைகளில் தனது புரிதல் என்ன என்று விரிவாகச் சொன்னார். முந்தைய விமர்சனம் ஒன்றில் கலாப்ரியாவின் கவிதைகளை ‘சாதாரணர்களின் கலகம்’ என்று சுகுமாரன் குறிப்பிட்டிருப்பதை முத்தையா சுட்டிக் காட்டினார்.

கவிஞர் சுகுமாரன், கலாப்ரியா புத்தக முன்னுரையில் “பாராட்டை மட்டுமே விரும்புகிற சாதாரண நபர்” என்று தன்னைப் பற்றி குறிப்பிட்டிருப்பதைச் சொல்லி பேசத் துவங்கினார். தனக்கும் மலையாள கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடுவுக்கும் வயது, இயங்குதளம் போன்றவற்றில் இருக்கும் ஒற்றுமைகளையும், பாலச்சந்திரனுக்கு அவரது ஐம்பதாவது வயதில் நடத்தப்பட்ட பாராட்டு விழா பற்றியும், தமிழ்ச்சூழலில் அத்தகைய நிகழ்வுகளுக்கான வாய்ப்புகள் இல்லாதது பற்றியும் பேசினார்.

தமிழின் நவீன கவிதையில் இருக்கும் தொடர்ச்சி பற்றி சுகுமாரன் குறிப்பிட்டது எனக்கு முக்கியமானதாகப் பட்டது. சுந்தர ராமசாமியின் கவிதை வரிசையில் எம்.யுவன் வருகிறார், ந.பிச்சமூர்த்தியின் தொடர்ச்சியாக வேணுகோபாலன் வ்ருகிறார்,ஞானக்கூத்தனை தொடர்ந்து ஆத்மாநாம் இருக்கிறார் ஆனால் கலாப்ரியாவில் தொடங்கினால் கலாப்ரியாவிலேயே தான் முடிக்க முடியும் என்றார். தமிழ் நவீன கவிதைகளில் பல்வேறு விதமான ஆய்வுகளுக்குட்படுத்தப்பட்ட கவிதைகள் கலாப்ரியாவினுடைய கவிதை என்பதும் சுகுமாரனின் குறிப்பு. இயற்கை அவதானிப்பு என்பது கலாப்ரியாவின் கவிதைகளின் தனித்துவம் என்று சுகுமாரன் பேசினார்.

அடுத்து ஜெயமோகன் பேசினார். அசோகமித்திரனுக்கு அறுபதாவது ஆண்டுமலரை தான் வெளியிட்டது பற்றிய தகவலைப் பகிர்ந்து கொண்டவர், விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் தொடக்கம் அதன் நோக்கம் பற்றியும் பேசினார். தான் கலாப்ரியாவின் கவிதைகளை ஏற்கனவே விரிவாக விமர்சனம் செய்திருப்பது பற்றியும் இது பாராட்டுவிழாதான் என்றும் குறிப்பிட்டு கலாப்ரியாவின் கவிதைகளில் உள்ள எளிமையைப் பற்றி பேசினார். பின்னர் கவிதைக்கும் கவித்துவத்துக்கும் இருக்கும் வேறுபாடு/தொடர்பு பற்றி சுவாரசியமான உதாரணங்களோடு விரிவாக்கினார். தான் நூறு வரிகளில் சொல்லக் கூடிய கதை ஒன்றை பக்கவாட்டில் அழுத்தினால் உருவாகக் கூடிய Micro Narration என்பது கவிதை என்றும் பேசி முடித்தார்.

கலாப்ரியா பேசத் துவங்கும்போதே தனக்கு இது மகிழ்ச்சியாகவும், சற்று கூச்சமாகவும் இருப்பதாகச் சொன்னார். தனது நேர்காணல்கள் அனைத்தும் ஒரே வடிவத்தில்(Pattern) இருப்பதாகச் சொன்னவர், இந்தக் கூட்டத்தில் சற்று வித்தியாசமான தகவல்களை பகிர்ந்து கொள்ள முடிகிறதா என்று முயல்வதாகக் குறிப்பிட்டார். தனது குடும்பத்தில் ஒன்பது பேர்களில் தான் மட்டுமே கல்லூரி வரை சென்றதாகவும் அதில் தனக்குக் கிடைத்த சுதந்திரம் மிக முக்கியமானதாகவும் இருந்ததாகச் சொன்னார். ஆனால் தனக்குள் உள்ளூர இருந்த அறம் சார்ந்த கட்டுப்பாடு அல்லது பயம் காரணமாக தனக்கான ஒரு எல்லைக் கோடு தொடர்ந்து இருந்தது என்றார்.

தீர்த்த யாத்திரையை தன் கல்லூரியின் தேர்வுக்கு முந்தைய விடுமுறை நாட்களில் எழுதியதாகச் சொன்னவர், நவீன் கணிதத்தில் இருக்கும் Concrete theory இல் இருந்து Abstract Theory க்கு செல்லும் அதே நுட்பத்தைத்தான் தன் கவிதைகளில் தான் முயன்று பார்ப்பதாகச் சொன்னார்.

கல்யாண்ஜி பேசுவார் என்று எதிர்பார்த்தேன். அவர் பேசாதது எனக்கு ஏமாற்றம்.

கூட்டம் கடைசி வரையில் கலையாமல் இருந்தது, கூட்டத்திற்குப் பிறகாக திட்டு திட்டாக வாசகர்கள், படைப்பாளிகளோடு பேசிக் கொண்டிருந்தார்கள். ஹோட்டலுக்கு கூட்டத்தில் கலந்து கொண்ட படைப்பாளிகளுடன் சென்று மதிய உணவை முடித்துவிட்டு, சுகுமாரன் எனக்காகத் திருவனந்த புரத்தில் இருந்து கொண்டு வந்திருந்த மூன்று புத்தகங்களைக் பெற்றுக் கொண்டு கிளம்பினேன். இரண்டு மணி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. கோவையில் வேறு எங்கும் செல்லாமல் பேருந்தில் ஏறி அமர்ந்து தூங்கிவிட வேண்டும் என்று நினைத்தேன். தொலைபேசியில் மனைவி அழைத்து “அப்படியே சென்னை சில்க்ஸ் போயி பையனை உட்கார வெச்சுப் பழக்கும் சேர் ஒண்ணு வாங்கிட்டு வந்துடுங்க” என்றாள். அலைய வேண்டும் என்று நினைக்கும் போதே வெயில் மூன்று டிகிரி அதிகமானதாக உணர்ந்தேன். அவளிடம் நான் கூட்டத்தில் ‘பேசு’வதற்காகத்தான் சென்றேன் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால், அரங்கசாமியிடமும்,உடுமலை.காம் சிதம்பரத்திடமும் சொல்லி அச்சடித்திருந்த ஒரு அழைப்பிதழை வாங்கிக் கொண்டு நகர்ந்தேன். என் பெயர் அதில் இருந்தது. வெயில் அப்படியேதான் இருந்தது.

ஆசிரியர் குறிப்பு: கணினித்துறையில் பணிபுரியும் திரு.வா.மணிகண்டன் சிற்றிதழ்களில் கவிதைகளும், கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். ‘கண்ணாடியில் நகரும் வெயில்’ என்ற கவிதைத் தொகுப்பும், ‘சைபர் சாத்தான்கள்’ என்ற கட்டுரைத் தொகுப்பும் வெளியாகியிருக்கின்றன. இவருடைய படைப்புகளை இவருடைய வலைத்தளத்தில் படிக்கலாம்.

கட்டுரையிலிருக்கும் புகைப்பட உதவி: சஞ்சய் காந்தி

நிகழ்ச்சியின் மேலும் சில புகைப்படங்களை இந்த இணைப்புகளில் பார்க்கலாம்:

http://picasaweb.google.co.in/blogsking/CkaZhK?feat=flashalbum#

http://picasaweb.google.com/112702711803427276201/KalapriyaCbe#

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s