ஊட்டி சந்திப்பு – சண்முகநாதன்

கட்டுரை http://www.sasariri.com/2010/09/blog-post_07.html

ஊட்டி இலக்கியக் கூட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு வாழ்வில் மிகவும் ஒரு அரிதான அனுபவம்,  என்னைப் போன்ற ஒரு கடைநிலை வாசிப்பாளனுக்கு அமைந்தது.

மற்ற நன்றி நவில்தல்களை நான் செலவிடும் முன் என் முதல் நன்றி கிரிக்கு, தன் தளத்தில் என்னை ஒரு விருந்தினர் பக்கம் எழுத அனுமதித்தமைக்காக.

நான் சண்முகநாதன், கிரியைபோல் நானும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் கணக்கியல் துறையில் பணி புரிகிறேன்..

சிறு வயது முதலே புத்தகங்களைப் புரட்டியபடி வளர்ந்த கைகள்தான் என் கைகள், எனினும் இதுதான் நான் எழுதும் முதல் கட்டுரை. எனவே, ஏதேனும் பிழைகள் இருப்பின் பொறுத்தருளவும். மேலும், ஊட்டிக் கூட்டத்தில் நான் பெற்ற அனுபவத்தை நான் பெற்றுக் கொண்டது போலவே அப்படியே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது ஒரு திறனாய்வோ அல்லது விமரிசனக் கட்டுரையோ அல்ல. என் அனுபவப் பகிர்வு, அவ்வளவே.

ஜெயமோகன் தன் இணையதளத்தில் ஊட்டி இலக்கிய சந்திப்பு பற்றிய அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.  உடனே கலந்து கொள்ள நானும் என் நண்பரும் அனுமதி கோரியிருந்தோம். இரண்டு வாரத்தில் அதற்கான அனுமதி கிடைத்தது.

என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய நிகழ்வு என்னவென்றால், சந்திப்பிற்கு சில தினங்களுக்கு முன் ஜெயமோகன் அவர்களே ஒரு முறை என்னைத்  தொலைபேசியில் அழைத்து என் வருகையை உறுதி செய்தார். பெரிய பெரிய கார்ப்பரேட்டுகள் கூடக்  கற்றுக் கொள்ள வேண்டிய எளிமையான பாடம் இது.

ஊட்டிக் கூட்டத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் திரு.அரங்கசாமி அவர்கள்தான் செய்திருந்தார்.

எங்கள் ரயில் பயணச்சீட்டு உறுதி செய்யப்படாததால் பேருந்தில் பயணம் செய்ய வேண்டி வந்தது. எனவே, நாங்கள் சற்றுத்  தாமதமாக சென்று சேர நேர்ந்தது. தவிர்த்திருக்க வேண்டிய, ஆனால் தவிர்க்க முடியாமல் போன நிகழ்வு.

நாங்கள் உள்நுழைகையில் சிறில் அலெக்ஸ் பேசி முடித்திருந்தார். இந்தியக்  கோட்பாடுகளைப் பற்றி ஜெயமோகன் பேசிக் கொண்டிருந்தார். நாங்கள் சென்று அமர்ந்து அந்தக் கூட்டத்துடன் ஒருவழியாக ஐக்கியமான வேளையில் இரண்டு மணியளவிற்கு மதிய உணவு இடைவேளை.

இடைவேளைக்குப் பின் இந்திய சிந்தனை மரபில் நான்கு மையக் கருத்துக்கள் பற்றி ஜெமோ பேசினார்.

விடுதலை
பிரபஞ்சம்
ஊழ்
வாழ்க்கை சூழல்

பின்பு 5 .30 லிருந்து 7 .30 ஒரு நடை பயணம் சென்றோம். 07 .30 க்கு மேல் சங்க இலக்கிய பாடல்கள். விளக்கங்களை ஜெயமோகன் மற்றும் நாஞ்சில் நாடன் இருவரும் அளித்தனர்.

10 மணிக்கு இரவு உணவு. பின்னர் உறக்கம் என முதல் நாள் முடிந்தது.

காலை மறுபடியும் நடைபயணம், பின்பு 9 மணிக்குக்  கூட்டம் ஆரம்பித்தது. கம்பராமாயணப்  பாடல்களை நாஞ்சில் நாடன் விளக்கினார். அவர் எப்படி கம்பராமாயணம் கற்றார் என்பது பற்றியும் சிலாகித்துக் கூறினார், மிகவும் சுவாரசியமாக இருந்தது. மதியம் சாப்பாடு வரை கம்பராமாயண பாடல்கள்தான்.

பின்பு வயிற்றுக்கு சற்றே உணவு ஈந்தபின் ஆழ்வார் பாடல்கள். படித்துப் பாடம் சொன்னது ஜடாயு அவர்கள். சிறப்பாக இருந்தது. காதல்தான் உச்சத்தில் இருந்தது. கண்ணனின் ரசிகைகள் வந்திருந்தால் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருப்பார்கள். அதிலும் குறிப்பாக ஆண்டாளின் பாடல்கள்.

அதன் பின் சைவப்  பாடல்கள் மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் வராததால் ஜெயமோகனே விளக்கினார். உவமை குறைவாக இருந்தாலும் நன்றாகப்  புரிந்தது. எளிமையாக உச்சத்துக்கு கொண்டு சென்றது.

மாலையில் மழை குறுக்கிட்டதால் நடைபயணம் செல்லவில்லை.

பின்பு செல்வ.புவியரசன் நவீனக் கவிதைகளை விளக்கினார். பாரதி மற்றும் பாரதிதாசன் வழி வந்தவர்கள் கவிதைகளாகவே இருந்தன. கண்ணதாசன் கவிதை மற்றும் லெனின் தங்கப்பா போன்றோர் கவிதைகளைத்  தவிர மற்றவை, என் பார்வையில்,  சுவாரசியமாக இல்லை.

இப்படி சுமார் 10 மணி நேரம் கவிதை கவிதை என கவிதை மட்டுமே. ஒரே நாளிலேயே நாங்கள் எல்லாம் செந்தமிழிலே பேசத் தொடங்கிவிடுவோம் போலத் தோன்றியது எனக்கு. அவ்வாறு இருந்தது கவிதைகளின் தாக்கம்.

ஜெயமோகன் எதை மனதில் கொண்டு சந்திப்பின்போது “மருந்தடிக்க” அனுமதியில்லை எனச் சொல்லியிருந்தார் என அப்போதுதான் விளங்கியது. நீண்ட நெடிய தமிழ்ப்பாலின் போதையைத் தொடர்ந்து சனிக்கிழமை சீக்கிரமே தூங்கச் சென்றோம்.

ஞாயிற்றுக்கிழமை 2 மணி வரைதான் கூட்டம் என்பதால் காலை 9 மணிக்கே கூட்டம் தொடங்கியது. வந்திருந்த கவிஞர்கள் தங்கள் சொந்தக் கவிதைகளில் வசித்தார்கள்…. மன்னிக்கவும் சொந்தக் கவிதைகளை வாசித்தார்கள். இளங்கோ கிருஷ்ணன், இசை, மோகன், தனசேகரன், மற்றும் முத்தாய்ப்பாக தேவதேவனும் வாசித்தார்.

எல்லா கவிதைகளும் சிறப்பாக இருந்தன. குறிப்பாக இளங்கோவின் காஞ்சிரம் மற்றும் மோகனின் பிணவறை காவலன் கவிதைகள் என்னை மற்றும் சபையோர்களையும் மிகவும் கவர்ந்தன.

பின்பு உணவு, முடிந்த பின் போட்டோ செஷன் மற்றும் கை குலுக்கல்கள். அவ்வளவுதான், கிளம்பிவிட்டோம் அங்கிருந்து.

இதுதான் கூட்டத்தின் சாராம்சம். ஆனால் நான் எழுத விழைவது கூட்டத்தைத்  தவிர்த்து மேலும்….

சந்திப்பு, ஏற்பாடுகள், உபசரிப்பு.

அங்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்தவர்கள். கவிஞர்கள், பதிப்பகத்தார், அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள், விவசாயிகள், கணினி துறையைச்  சார்ந்தவர்கள். எல்லோருக்கும் ஒரே வித தங்கும் வசதி, ஒரே மாதிரியான உணவு, உபசரிப்பு.

எங்கள் பயணச் செலவைத் தவிர வேறேதும் நாங்கள் செலவிடும் அவசியம் ஏற்படவில்லை. இது எல்லாம் அந்தக்  கூட்டத்தை நடத்தியவர்கள் தாங்கள் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றும் கடமையாகச் செய்ததை நான் இங்கே குறிப்பிட்டேயாகவேண்டும். பொதுவாக இது போன்ற சந்திப்புகளை ஏற்பாடு செய்வதிலிருந்து ஐம்பது முதல் அறுபது வரையிலான பங்கேற்பாளர்களுக்கு வசதிகளை செய்து தருவதில் உள்ள பொதுவான சவால்கள் நாம் அனைவரும் அறிந்ததே. எனினும் தடைகள், தடங்கல்கள் ஏதுமின்றி இந்தச் சந்திப்பு இனிமையாக அரங்கேறியது மிகவும் நெகிழ்ச்சி தரும் விதமாக இருந்தது.

ஜெயமோகன்

இத்தனை விஷயங்களை இவர் எப்படித்தான் பழகினாரோ என எனக்குத் தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் இவரால் விளக்கம் சொல்ல இயல்கிறது, குறிப்பாக, கேட்பவர்களுக்குப் புரிவதுபோல.

கூட்டத்திற்கு வெளியில் பழகிய நேரங்களில் மட்டும்தான் அவர் ஜெயமோகன் எனத் தெரிந்தார். மற்றபடி கம்பனையும், ஆழ்வாரையும் , அப்பரையும் மட்டும் தான் நாங்கள் அவருள் கண்டோம். அவரைப் பற்றியோ அல்லது அவர் நூல்களைப்  பற்றியோ அவர் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. மற்றவர்கள் தான் சில மேற்கோள்களைக் காட்டினார்கள்.

அந்தப்  பகுதியிலிருந்த சில சிறுமிகள் அவரைக் காண வந்திருந்தார்கள். அவர்கள் அங்காடித் தெரு ரசிகைகள் போல. தீவிர சினிமா ரசிகர்களின், குறிப்பாக அந்தச் சின்னஞ்சிறுமிகளின் புரிதல் நிலைக்கு ஏற்றவாறு அங்கே ஜெமோ பேசியதைக் கண்டேன். என்னைப் போன்ற ஒரு அடிப்படை இலக்கிய வாசகனா? கவலையில்லை, எனக்கேற்றவாரும் அவரால் பேச முடிகிறது. ஜெமோவின் வாசகர் ஒரு வழக்கறிஞரா? அங்கும் ஒரு வக்கீல் நகைச்சுவையை மேற்கோள் காட்டி அவரால் பேச முடிகிறது.  வியப்பாய்த்தான் இருக்கிறது.

தன்மயனந்தா

இவர்தான் இந்த நாராயண குருகுலத்தின் தற்போதைய நிர்வாகி என்று நினைக்கிறேன். இவர் ஒரு மருத்துவர். பல நாடுகளின் மருத்துவ முறைகள் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார். நிறைய மருத்துவத் தகவல்கள் சொன்னார். இவர்தான் எங்களுக்கு காப்பி எல்லாம் கூடப் போட்டுத் தந்தார். இவர் போல் ஒரு எளிமையாவரை நான் பார்த்ததே இல்லை எனலாம். என்னை மிகவும் கவர்ந்தவர். நிறைய பேரை தன் எளிமையால் கூசச் செய்தார்.

நாஞ்சில் நாடன்

இவரின் கம்பராமாயணப் பாடல் விளக்கங்கள்தான் கூட்டத்தின் உச்சம் என்பேன். கம்பராமாயண பாடல்களுக்கு மட்டுமே தனிக்கூட்டம் ஏற்பாடு செய்வதாகக் கூறுமளவிற்கு இருந்தது இவரின் கம்பராமாயணப் பிரவாகம். கூட்டத்தைத் தாண்டியும் வெளியில் இவரிடம் பேச வாய்ப்பு கிடைத்தது.பெரும்பாலும் சிறுதெய்வங்கள் மற்றும் பாரம்பரியங்கள் பற்றியே அதிகமாகப்  பேசினார்.. அதையே அவரிடம் எல்லோரும் கேள்வியாக கேட்டார்கள் என்று நினைக்கிறேன். இவரின் சிரிப்பு மிகவும் அழகாக இருக்கிறது.

சுற்றுப்புறம்

அவ்வளவு அழகாக இருந்தது சுற்றுச்சூழல். எங்களுக்கு அந்த இடம் தாண்டி எதைப்பற்றியும் ஞாபகம் வரவிடவில்லை. அலுவலகம் மற்றும் குடும்பத்தை மறந்தது போல இருந்தது.. நாங்கள் தங்கியிருந்த குடிலும் அப்படிதான், மிகவும் ரம்மியமாக இருந்தது. நாங்கள் நன்றாக அனுபவித்தோம் அந்தச் சூழலை என்றுதான் சொல்லவேண்டும்.

இதில் வருந்தத்தக்க விஷயம், நாங்கள் இருமுறைதான் நடைபயணம் செய்ய வாய்ப்பு அமைந்தது. மழையின் குறுக்கீடால் அதற்கு மேல் வாய்ப்பு அமையவில்லை.

கடைசியாக….

தேவதேவன், இளங்கோ கிருஷ்ணன், இசை, மோகன் போன்ற கவிஞர்களோடு பேசவும், பழகவும், பொழுதுகளை கழிக்கவும் வாய்ப்பளித்த ஜெயமோகன் அவர்களுக்கும் மற்றும் அவர் நண்பர்களுக்கும் எனது நன்றியையும் மற்றும் அன்பையும் இதன் மூலமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி,
சண்முகநாதன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s