இலக்கியம், சினிமா இடையே இடைவெளி குறைய வேண்டும்: மணிரத்னம்

கோவை, டிச. 19: இலக்கியம், சினிமா இடையிலான இடைவெளி குறைய வேண்டும் என திரைப்பட இயக்குநர் மணிரத்னம் கூறினார்.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

விழாவில் ஆ.மாதவன் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “கடைத்தெருவின் கலைஞன்’ நூலை வெளியிட்டு மணிரத்னம் பேசியதாவது:

சினிமாவுக்கும், இலக்கியத்துக்கும் நீண்ட இடைவெளி இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதனை தீர்க்கும் ஒரு முயற்சியாக இந்த விழாவில் பங்கேற்றுள்ளேன். ஆ.மாதவன் இருட்டில் வாழும் கதாபாத்திரங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருபவர் என்று கூறினர். என்னை இருட்டில் படம் எடுப்பவன் என்று கூறுவர். என்னை ஏன் இந்த விழாவுக்கு அழைத்தார்கள் என்று இப்போது புரிகிறது.

ஆ.மாதவன் எழுதிய கிருஷ்ணப் பருந்து நாவலில் முதல் 4 பக்கங்கள் மொழிநடையைப் புரிந்து கொள்ளக் கடினமாக இருந்தது. அதற்குப் பிறகு நாவலில் ஆழ்ந்து விட்டேன். அழகிய காட்சிகளாக நாவல் விரிகிறது. இந்த நாவலில் உள்ளதில் ஒரு சதவீதம் எடுத்தால் கூட சிறந்த சினிமாவாகிவிடும். இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் இடையிலான இடைவெளி குறைய வேண்டும் என்றார்.  எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு, விஷ்ணுபுரம் விருது மற்றும் ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை மலையாள நாவலாசிரியர் புனத்தில் குஞ்ஞப்துல்லா வழங்கிப் பேசியதாவது: இந்தியாவின் சிறந்த மொழியாக தமிழ் விளங்குகிறது. பழமையான மொழியான தமிழ் மொழியை தமிழர்கள் தாயைப் போல் எண்ணி போற்றுகின்றனர். இவர்களிடமிருந்து மொழிப் பற்றை கற்றுக் கொள்ள வேண்டும். பிற மொழிகளின் ஆதிக்கத்தை எதிர்க்கும் வகையில் தமிழகத்தில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் மொழிப் பற்றை எடுத்துக் காட்டுகிறது.

தென்னிந்தியா புவியியல் ரீதியில் நெருக்கமானது. ஆனால் மொழிரீதியாக இடைவெளி காணப்படுகிறது. மாநிலம் விட்டு மாநிலம் செல்லும்போது ஆட்டோக்காரரிடம் வழி கேட்கும்போது கூட மொழிப் பிரச்னை வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். இரு மொழிகளில் எழுதுகிறவர்கள் குறைவு. வட மாநிலத்தில் ஹிந்தியுடன் இணைந்து எழுதும் இரு மொழி எழுத்தாளர்கள் உள்ளனர்.

ஆ.மாதவன் தமிழ், மலையாளம் இரண்டிலும் எழுதும் எழுத்தாளர். திருவனந்தபுரத்தில் பாத்திரக் கடை நடத்தி வரும் இவரை சிலர் பாத்திரம் விற்பவர் என்று கூறியுள்ளனர். எழுத்தாளன் பாத்திரத்தை படைப்பவன்தானே. இவர் படைப்பதோடு உண்மையான பாத்திரங்களோடும் இருக்கிறார். ஆ.மாதவன் ஞானபீடம் விருது மற்றும் நோபல் பரிசு பெற வேண்டும் என்றார்.

தரமான படைப்பாளிகளுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரங்களை யார் யாரோ தட்டிப் பறிக்கிறார்கள். படைப்பாளிக்கு வாழும் காலத்திலேயே அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றார் கோவை ஞானி.

படைப்பாளியை ஒரு குறிப்பிட்ட வட்டத்துள் அடக்கி விடக்கூடாது. தமிழ்ப் பெற்றோருக்குப் பிறந்து மலையாளத்தில் படித்து தமிழில் படைத்தவர் ஆ.மாதவன். ஆனால் அவரைத் தமிழ்ச் சமுதாயம் அங்கீகரிக்கவில்லை என்றார் எழுத்தாளர் நாஞ்சில் நாடன்.

Source: http://dinamani.com/cinema/article993822.ece

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: