ஏற்காடு இலக்கிய முகாம் – 2013 – எம்.ஏ.சுசீலா

இலக்கிய நிழலடியில் -2013 – எம்.ஏ.சுசீலா

’’தொடர்ந்து வரும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தமிழ் மொழியையும் இலக்கியத்தையும்,படைப்பாகவும் ஆய்வாகவும் கொண்டு சேர்த்துத் தொடர்ந்து அவற்றை முன்னெடுத்துச்செல்பவை இத்தகைய எளிய….ஆத்மார்த்த முயற்சிகளே என்பது இந்த அரங்கின் முடிவில் மேலும் வலுப்பட்டது….’’

இலக்கிய நிழலடியில் ..என்ற தலைப்பில் சென்ற ஆண்டு -2012- ஊட்டியில் எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்களைக்கொண்ட எங்கள் விஷ்ணுபுர இலக்கிய வட்டம் நடத்திய இலக்கியக்கூடல் பற்றி முன்பு எழுதியிருந்தேன். அதில்,
’’கல்விப்புலங்கள் செய்ய வேண்டியதை..செய்யத் தவறியதை இவ்வாறான ஆத்மார்த்தமான இலக்கியக் கூடுகைகள்தான் இட்டு நிரப்பிக் கொண்டிருக்கின்றன…’’
என்று நான் குறிப்பிட்டிருந்ததை மேலும் மெய்ப்பிக்கும் வகையில்
ஏற்காட்டில் இவ்வாண்டு ஜூன் 28,29,30 ஆகிய மூன்று நாட்களும் நிகழ்ந்த இலக்கிய ஆய்வரங்கமும் , காவியவாசிப்பும் சென்ற ஆண்டையும் விஞ்சுவதாக , மிகச்சிறப்பான திட்டமிடலுடன் செம்மையாக அமைந்திருந்தன.

ஏற்காடு இலக்கியக்கருத்தரங்கில் பங்கு பெற்றோர்

நவீன இலக்கிய வாசிப்புக்குள்ளும் எழுத்துக்குள்ளும் வர விரும்பும் இளம் எழுத்தாளன் மற்றும் வாசகனுக்கு மரபிலக்கிய வாசிப்பும் பயிற்சியும் தேவை என்பதால் இலக்கிய முகாம் நடந்த மூன்றுநாட்களும் காலை அமர்வில் கம்பராமாயண ஆரண்ய காண்டப்பாக்கள் சிலவற்றின் விளக்கமும் வில்லிபாரத அறிமுகமும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன்,ஜடாயு ,பேரா.கு..ஞானசம்பந்தம் ஆகியோரால் தரப்பட்டன. சென்ற ஆண்டு அயோத்தியா காண்டம் பேசப்பட்டதால் இவ்வாண்டு அதன் தொடர்ச்சியாக ஆரண்ய காண்டம்;  அதன் ஒவ்வொரு படலத்திலும் குறிப்பிட்ட சில பாடல்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றின் இலக்கிய நயங்கள் விவாதிக்கப்பட்டதுடன் படலங்களுக்கு இடையிலான கதைத் தொடர்ச்சியும் பங்கேற்பாளர்களுக்கு விளக்கப்பட்டது. விளக்கங்களுக்கு இடையிடையே சீர் பிரித்து வாசிக்கும் பயிற்சியினையும் இளம் நண்பர்கள் பெற்றனர்.

கவிஞர் தேவதேவன்,விமரிசகர் மோகனரங்கன்,எழுத்தாளர் நாஞ்சில்நாடன்

மேலோட்டமான காவிய வாசிப்பிலும், காலட்சேபப்பாணியிலான உரைகளிலும் தவற விட்டுவிடும் பல நுட்பமான கவிதை அழகுகளைத் திரு ஜெயமோகனும் நாஞ்சிலும் மேலும் பலரும் அவ்வப்போது சுட்டிக்காட்டிக்கொண்டே சென்றது இந்நிகழ்வின் கூடுதல் சிறப்பு; குறிப்பாக ஆரண்ய காண்டத்தில் சடாயு காண் படலத்தில்  சடாயு  வானிலிருந்து கீழே இறங்கி வரும்போது
‘’தரைத் தலை இழிந்து அவர்த் தழுவு காதலன்’’
என்கிறான் கம்பன்.

மலையைக் குறிப்பிடுவதற்குத்  ‘’தரைத்தலை’’என்னும் சொற்றொடர் கையாளப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டிய நாஞ்சில் நாடன் இத்தகையதொரு தொடர் மலைக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதை முதன் முறையாகத் தான் எதிர்ப்படுவதாகக் கூறியபோது….அந்த உண்மை என்னுள்ளும் துலக்கமாயிற்று.

இராவணனின் உள்ளத்தில் சீதை மீதான காமத்தைக் கிளந்தெழச்செய்கிறாள் சூர்ப்பனகை; படிப்படியாக அவன் உள்ளத்தில் அந்தக்காமத்தீ பற்றிக்கொள்வதை, அவனது உள்ளம் சிறித்து சிறிதாக நெகிழ்ந்து வருவதை
’’அயிலுடை அரக்கன் உள்ளம் அவ்வழி மெல்ல மெல்ல 
வெயிலுடை நாளில் உற்ற வெண்ணெயைப்போல் வெதும்பிற்றன்றே’’
என்று சொல்லிச்செல்கிறான் கம்பன்,.அந்தக்கட்டத்தில் வெண்ணெய் உருகலைக் குறிப்பிட்டுச் சுட்டிய  ஜெயமோகன், அங்கே ’வெயிலுடை நாளில் உற்ற வெண்ணெய்’ என வருவதால் , வெயிலில் வைத்த வெண்ணெய் உருகல் என்று கொள்ளாமல் வெயில் காலத்தில் வீட்டுக்கு  உள்ளே வைக்கப்பட்டிருக்கும் வெண்ணெய் கூட  நெகிழ்ந்து போல அவன் உள்ளமும் அவள் மீது விளைந்த காமத்தால்  படிப்படியாகக் குழைந்து போகிறது என்று கொள்வதே ஏற்றது என எடுத்துக் காட்டினார்; ஒரு கவிதையை வெறுமே மேம்போக்கில் கடந்து சென்று விடாமல், அதன் ஆழம் வரை செல்லும்போதுதான் கவிமனத்தையும் அவன் உருவாக்கிய பாத்திர இயல்பையும் விளங்கிக்கொள்ள முடியும் என்பதை நிறுவுபவை அத்தகைய அவதானிப்புக்களே.

ஒவ்வொரு நாளும் காலை அமர்வுகள் ஒன்பதரை மணிக்குத் தொடங்கி மதியம் ஒன்றரை அல்லது இரண்டு மணி வரை கூட நீள்வதுண்டு. அதே போல தினந்தோறும் பிற்பகலில் இரு அமர்வுகள். மதியம் இரண்டரை மணி அல்லது 3 மணி முதல் 5 அல்லது ஆறு வரை ஒரு அமர்வு; பிறகு ஒரு மணி நேர மாலை நடை. [நடைப்பயணத்தின்போது ஜெயமோகனுடன் நிகழ்த்தும் உரையாடல்கள் மிக அற்புதமானவை; அரிதான இலக்கிய,வரலாற்று,தத்துவச் செய்திகள் ஒன்றன் பின் ஒன்றாக அவரிடமிருந்து கொட்டிக்கொண்டே இருக்கும் அந்தத் தருணத்தைதவற விட எவரும் விரும்புவதில்லை என்பதாலேயே நீண்ட நடைக்கும் எவரும் தயங்குவதில்லை;களைப்படைவதுமில்லை]

மாலை நடைக்குப் பின் இரவு 7 மணி முதல் 9 மணி அல்லது அதற்கு மேலும் கூட நீளும் அமர்வுகள். சற்றும் களைப்படையாத உற்சாகத்துடன்…..இன்னும் இன்னும் என்று ஆர்வத்தோடு உள்வாங்கிக்கொண்ட பங்கேற்பாளர்கள் என்று சலிப்புத்தட்டாத ஓட்டத்தோடு நடந்த இலக்கிய விவாதங்கள் இது போன்ற இலக்கியக்கூடுகைகளில் மட்டுமே சாத்தியமாகின்றன என்பதையும் கல்வி நிலையங்கள் நிதி நல்கைக்குழுவோடும் பிற வகைகளிலும் நடத்தும்   கருத்தரங்குகளிலேயும் கூட இந்தச்சீர்மையைக் கண்டதில்லை என்பதையும் [ஒரு கல்வியாளராக இருந்த அனுபவத்தில்]  மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன்.

இலக்கிய வகுப்பில் ….

பிற்பகல் அமர்வுகள் இக்கால இலக்கிய வகைப்பாடுகளான சிறுகதை,கவிதை சார்ந்து அமைந்தன.
சிறுகதைகளும் கவிதைகளும் உலக இலக்கியம்,இந்திய இலக்கியம்,தமிழ் இலக்கியம் என்ற மூன்று பிரிவுகளிலும் வெவ்வேறு காலகட்டங்களாகப்பிரித்துக்கொள்ளப்பட்டுப் பங்கேற்பாளர்களர்கள் சிலரால் ஆய்வு செய்யப்பட்டன. அமர்வுகளில் வாசிக்கப்பட்ட படைப்புக்களும்[கம்பன் கவிதைகளும்] இலக்கியக்கூடலில் பங்கு பெறுபவர்களுக்கு முன்பே மின் அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டு விட்டதால் அவற்றை முன் கூட்டியே வாசித்து விவாதிப்பதற்கேற்ற தெளிவோடு பலரும் வந்திருந்தது மிகவும் ஆரோக்கியமான ஒரு போக்கு.

சிறுகதை அமர்வில் வாசிக்கப்பட்ட படைப்புக்களும் ஆய்வாளர்களும்;
1.செவ்வியல் உலகச்சிறுகதை
[Am I Insane? Guy De Maupassant]

ராஜகோபாலன் ஜானகிராமன்
2.இரண்டாம் கட்ட உலகச்சிறுகதை
வீட்டின் அருகே மிகப்பெரும் நீர்ப்பரப்பு
(SO MUCH WATER SO CLOSE TO HOME) ரேமண்ட் கார்வர்
விஜயராகவன்
3.இன்றைய காலகட்ட உலகச்சிறுகதை FREE FRUIT FOR YOUNG WIDOWS
NATHAN ENGLANDER
சித்தார்த் வெங்கடேசன்
4.செவ்வியல் காலகட்ட இந்தியச் சிறுகதை ஆசாபங்கம் (வங்கம்) தாகூர் கடலூர் சீனு
5.பிற்கால இந்தியச் சிறுகதை
சந்தனுவின் பறவைகள் (மலையாளம்) பால் சக்காரியா
 சுனீல் கிருஷ்ணன்
6.முதல் தலைமுறை தமிழ்ச்சிறுகதை- அன்று இரவு புதுமைப்பித்தன் –
ஜடாயு
7.இரண்டாம் தலைமுறை தமிழ்ச்சிறுகதை விகாசம்- சுந்தர ராமசாமி
அருணா
 8.மூன்றாம் தலைமுறை தமிழ்ச்சிறுகதை கதை-கந்தர்வன்
தனா
9.நான்காம் தலைமுறை தமிழ்ச்சிறுகதை நீர் விளையாட்டு-பெருமாள் முருகன்
சுதா ஶ்ரீனிவாசன்
10.சமகால தமிழ்ச் சிறுகதை இரவில் கரையும் நிழல்கள் -கவின்மலர்
சு.யுவராஜன்

கவிதை அமர்வில் வாசிக்கப்பட்ட படைப்புக்களும் ஆய்வாளர்களும்;
1 உலகக்கவிதை
லியோபோல்டு செங்கோர் (ஆப்பிரிக்கா)
 யாராய் இருந்தால் என்ன? – பவுலுஷ் சைலன்ஷ்யாரியஸ்(கிரேக்கம்)
அஸ்திவாரங்கள் – அன்னா அக்மதோவா (ருஷ்யா)
 :க மோகனரங்கன்
2 இந்தியக்கவிதை
பழக்கப்படுத்துதல்
சோறு
அனிதா தம்பி (மலையாளம்)
மணிகண்டன்
3.தமிழ்க்கவிதை முதல் தலைமுறை
1. பாலை — பிரமிள்
2. என்ற ஒன்று – அபி
சீனிவாசன்
4.தமிழ்க்கவிதை இரண்டாம்தலைமுறை
 அள்ள அள்ள = கல்யாண்ஜி
மறு பரிசீலனை ஆத்மாநாம்
 சுரேஷ்
5.சமகாலத்தமிழ்க்கவிதை
தாண்டவம் – இளங்கோ கிருஷ்ணன்
லட்சுமி டாக்கீஸ் -இசை
கிருஷ்ணன்
1. உள்ளே வைத்து உடைப்பவர்கள் -லிபி ஆரண்யா
2. முன்னொரு காலத்தில் குணசேகரன் என்றொருவன் வாழ்ந்து வந்தான் இசை
லிபி ஆரண்யா
சாம்ராஜ்
மாப்பசான் கட்டுரை அளித்த ராஜகோபாலன்
குவைத் நாட்டிலிருந்து சித்தார்த் வெங்கடேசன்

ஆய்வாளர்கள் பத்து நிமிடங்களில் தங்கள் தெரிவுகள் குறித்துக்கட்டுரை வடிவிலோ பேச்சு வடிவிலோ சொல்லி முடித்ததும் அவற்றின் மீதான விவாதம் தொடர்ந்து நீண்டது. ஒவ்வொரு படைப்புக்கும் பல பார்வைகளும்,பல கோணங்களும் இருப்பதையும் பலப்பல முறை re-reading செய்வதன் வழியாகவே அவற்றிலிருந்து பெறமுடிகிற அல்லது பெறத் தவறுகிறதரிசனத்தை அப்போதுதான் உணர முடியும் என்பதையும் அந்த உரையாடல்களே மெய்ப்பித்தன. ஆய்வாளர்கள் சுருக்கமும்  செறிவும் கூடிய கூர்மையான மொழியில் தங்கள் கருத்துக்களைக் கச்சிதமாகப் பதிவு செய்தனர்.

இலக்கியம் என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல;அது,தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய-அணுகப்பட வேண்டிய ஒன்று என்னும் ஒத்த மனம் கொண்டவர்களின் ஏற்பாடாகவும்,அத்தகையோரின் பங்கேற்பாகவும்  அமைந்ததே இந்த இலக்கிய அரங்கின் வெற்றி.
மனதுக்கு மிகவும் நிறைவாக அமைந்த ஏற்காடு இலக்கியக்கியக் கூடலில் புதிய பல நண்பர்களும் கூட நெடுநாள் பழகியவர்கள் போல.நெஞ்சுக்கு நெருக்கமாகிப்போனார்கள். .ஒரு குடும்பம் போன்ற இனிய நெருக்கமும் உறவும் இந்த இலக்கியவட்டத்திலே மட்டுமே சாத்தியம் என்ற  விம்மிதம் தொடர்ந்து எழுந்து கொண்டே இருந்தது.
தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்  உடல்நிலைக்கோளாறையும் தங்கள் இலக்கிய ஆர்வத்தால் வென்றெடுத்த வானவன் மாதேவி-ஏழிசை வல்லபி சகோதரிகளை இங்கே சந்தித்ததும் அவர்களின் தணியாத இலக்கிய ஆர்வத்தைக்காண முடிந்ததும் ஒரு  நல்ல அனுபவம்.
வானதி-வல்லபி சகோதரிகள்
ஈரோடு விஜயராகவனுடன் நான்…
விஷ்ணுபுர ஒருங்கிணைப்பாளர் அரங்கசாமி
ஸ்ரீநிவாசன்,சுதா
உணவு மற்றும் தங்குமிடம்,நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஏற்காட்டில் ஒருங்கிணைத்து மிகச்செம்மையோடு செயலாற்றிய ஈரோடு திரு விஜயராகவன்,பிரசாத்…அரங்கசாமி மற்றும் அனைத்து நண்பர்களின் உழைப்புக்கும் பின்னணியில் இருந்து ஊக்குவது, இலக்கிய ஆர்வம் ஒன்றே என்பது மகிழ்வூட்டுவது.
உணவுக்கூடல்
தொடர்ந்து வரும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தமிழ் மொழியையும் இலக்கியத்தையும்,படைப்பாகவும் ஆய்வாகவும் கொண்டு சேர்த்துத் தொடர்ந்து அவற்றை முன்னெடுத்துச்செல்பவை இத்தகைய எளிய….ஆத்மார்த்த முயற்சிகளே என்பது இந்த அரங்கின் முடிவில் மேலும் வலுப்பட்டது….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: