இந்திரா பார்த்தசாரதி :விஷ்ணுபுரம் விருது விழா 2013 சிறப்பு விருந்தினர்

விஷ்ணுபுரம் விருதுவிழா 2013ல் இந்திரா பார்த்தசாரதி கலந்துகொள்கிறார். தமிழின் மூத்த பெரும்படைப்பாளிகளில் ஒருவர் இ.பா

இந்திரா பார்த்தசாரதி

நவீனத்தமிழிலக்கியம் உருவான நாள் முதல் அதற்கு ஒரு பொதுத்தன்மை இருந்தது. அதன் முன்னோடிப்பெரும்படைப்பாளிகள் ஏறத்தாழ அனைவருமே கிராமங்களை, அல்லது சிறுநகரங்களைச் சார்ந்தவர்கள். புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி போன்ற சிலர் முழுவாழ்க்கையையும் பெருநகரில் கழித்தவர்கள், ஆனால் பெருநகர் வாழ்க்கையை அவர்கள் எழுதவில்லை. பெருநகர்வாழ்க்கையைப்பற்றிய கிராமத்தானின் விலகலும் விமர்சனமுமே அவர்களின் படைப்புகளில் இருந்தது.

இன்னொருபக்கம் பெருநகர் வாழ்க்கையை எழுதியவர் அசோகமித்திரன். ஆனால் அவரது உலகம் பெருநகரின் அடித்தளமாக உள்ள நடுத்தவர்க்கம்தான். அவர்களின் சலிப்பூட்டும் சின்னஞ்சிறு வாழ்க்கை. பெருநகர் வாழ்க்கையின் அடையாளமாக உள்ள அதிகாரச்சிடுக்குகள், ஆடம்பரங்களின் விளையாட்டுகள், அறிவார்ந்த சிக்கல்கள் ஆகியவை அசோகமித்திரன் உலகில் இல்லை.

அந்தப்பெரும் இடைவெளி இந்திரா பார்த்தசாரதி என்ற முன்னோடியின் படைப்புகள் வழியாகவே தமிழில் நிரப்பப்பட்டது என்று சொல்லமுடியும்.தமிழின் முதல் பெருநகர்சார் வாழ்க்கையின் முகத்தை தன் வலுவான ஆக்கங்கள் மூலம் சித்தரித்தபடி தமிழில் நுழைந்த இந்திரா பார்த்தசாரதி பெரிதும் கவனிக்கப்பட்டது இந்த தனித்தன்மையினால்தான். இந்திரா பார்த்தசாரதியை தொடர்ந்து வந்த ஆதவன் அந்த மரபை வலுவாக முன்னெடுத்தார். ஆனால் ஆதவனுக்குப்பின் அத்தகைய எழுத்து தமிழில் தொடர்ச்சியற்றுப்போனது

டெல்லிதான் இந்திரா பார்த்தசாரதியின் களம். டெல்லியை இந்திரா பார்த்தசாரதி இரண்டு வகையான உதிர்பாகங்கள் கொண்ட மாபெரும் இயந்திரமாகப் பார்க்கிறார். ஒன்று அதிகாரத்தை நேரடியாகக் கையாளும் உயரதிகாரிகளும் அரசியல்வாதிகளும். இரண்டு, அவ்வதிகாரத்தின் பகுதியாகவும் அதேசமயம் அடிமையாகவும் இருந்து அதை ஒவ்வொருநாளும் பார்த்து வரும் குமாஸ்தா வர்க்கம். இவ்வொருசாராரின் மனத்திரிபுகளையும் நுட்பமான கிண்டல் வழியாக சித்தரிப்பவை இந்திரா பார்த்தசாரதியின் படைப்புகள். ஆரம்ப கட்ட நாவல்களான தந்திரபூமி, சுதந்திரபூமி போன்றவை மிகச்சிறந்த உதாரணங்கள்.

இந்திரா பார்த்தசாரதியின் நிரந்தரமான பேசுபொருளே அதிகாரம்தானோ என்ற எண்ணம் அவரது நூல்களை வாசிக்கையில் உருவாகும். அதிகாரம் உயர் வெப்ப உலை போல. அதனருகே செல்பவை எல்லாமே உருகி உருமாறிவிடுகின்றன. விதவிதமாக நெளிந்திருக்கும் மனிதர்களை அவரது புனைவுலகம் மெல்லிய புன்னகையுடன் காட்டுகிறது. குமாஸ்தாக்கள் உயர் அறிவுஜீவிகளாக ஆகி கொதார்த் ஃபெலினி என்று பேச ஆரம்பிக்கிறார்கள். கர்நடக சங்கீதத்தில் ஈடுபடுகிறார்கள். நான் குமாஸ்தா மட்டுமல்ல என்று தனக்கும் பிறருக்கும் நிரூபிக்கும் முகமாக. அதிகாரிகள் பெருந்தன்மை கொண்ட புரவலர்கள் ஆகிறார்கள். நான் அதிகாரி மட்டுமல்ல என்று காட்டுவதற்காக.

மனிதர்களின் பாவனைகளை அதிகமாகச் சொன்னவர் இந்திரா பார்த்தசாரதி. உணர்ச்சியற்ற அறிவார்ந்த ஆய்வுநோக்கு கொண்ட பார்வை அது. ஆகவே அவரது புனைவுகள் ஃப்ராய்டிய உளவியலுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்தன. கதைமாந்தரின் உளவியலை கதைக்குள்ளேயே அலசிச்செல்லும் எழுத்துமுறை. பின்னர் ஆதவன் அதை மேலும் முன்னெடுத்தார்

எழுபதுகளில் மெல்ல இந்திரா பார்த்தசாரதி இருத்தலியல் சிந்தனைகளை நோக்கிச் சென்றார். அறிவார்ந்த அங்கதம் மெல்ல அர்த்தமின்மை என்னும் தரிசனம் நோக்கிச் சென்றது. இந்திரா பார்த்தசாரதி இந்தக்காலகட்டத்தில் இதற்கான சிறந்த வடிவமாக நாடகம் நோக்கிச் சென்றார். தமிழ் நவீன நாடகத்தின் மூலவர்களில் ஒருவராக இந்திரா பார்த்தசாரதி கருதப்படுவது இந்நாடகங்கள் வழியாகவே. குறிப்பாக போர்வை போர்த்திய உடல்கள் தமிழின் மிகச்சிறந்த யதார்த்த நாடகம் என அன்றுமின்றும் கருதப்படுகிறது.

இந்திரா பார்த்தசாரதியின் பிற்கால நாவல்கள் நம் அரசியலின் அறவீழ்ச்சியை நோக்கிய அங்கதம் கொண்டவை. மாயமான் வேட்டை, வேதபுரத்து வியாபாரிகள் போன்றவை அவாது அங்கததரிசனத்தின் உதாரணங்கள்.

இணைப்புகள்

இபா கதைகள்

இபா கதைகள் தொகுப்பு


இபா கதைகள் ஓபன் ரீடிங் ரூம்

மீள்பதிவு: http://www.jeyamohan.in/?p=42671

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s