விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – அறிமுகம்

எழுத்தாளர் ஜெயமோகனால் இலக்கியத்தின் பால் ஈர்க்கப்பட்ட நண்பர்கள் ஒன்று கூடுவதன் மூலமாக உருவானது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் , உலகெங்குமுள்ள , பெரும்பாலும் இணையத்தால் இணைந்த நண்பர்கள் ஒன்று கூடியபோது பொதுவான ஆர்வம் ஜெயமோகனின் எழுத்துக்களாக இருக்கக் கண்டோம் ,

முதல் முயற்சியாக கோவையில் ஜெயமோகன் வாசகர் சந்திப்பு ஒன்றினை நிகழ்த்தினோம். நண்பர்களிடத்திலும், வாசகர்களிடத்திலும் கிடைத்த வரவேற்பு தொடர்ந்து இலக்கியக் கூட்டங்களை நடத்தும் உத்வேகம் தந்தது.

அட்டை இல்லாமல் புத்தகங்களும், சட்டை இல்லாமல் மனிதர்களும், பெயரில்லாமல் அமைப்புகளும் இருக்கக் கூடாது. எனவே ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்’ உருவானது.

இலக்கிய கூடல்களும் , நிகழ்சிகளும் அடிப்படை திட்டம்.

Advertisements

கோவையில் வாசகர் சந்திப்பு 2010 – கடிதம்

கோவையில் வாசகர் சந்திப்பு நடத்துவதைப் பற்றி நண்பர்கள் பலர் சொன்னார்கள். [வாசகர் சந்திப்பு ஒரு கடிதம்] ஆர்வத்துக்கு நன்றி. ஏற்பாடு செய்யலாம். நான் கோவையில் ஏதேனும் கூட்டத்தில் பேசி பல வருடங்கள் ஆகின்றன. கிட்டத்தட்ட பத்து  வருடங்கள்கூட இருக்கும் என்று நினைக்கிறேன். மீண்டும் கோவை வருவதில் மகிழ்ச்சி

தமிழில் எனக்காக நிகழ்த்தப் பட்ட முதல் கூட்டம் 1991 ஜனவரியில் விஜயா வேலாயுதம் ஏற்பாட்டில் கோவையில் நடைபெற்றது. ரப்பர் வெளியானபோது, அதன் மீதான விமரிசனக்கூட்டம் அது. அதன்பின்னர் அடிக்கடி வர நேரவில்லை. தோப்பில் அண்ணாச்சியின் துறைமுகம் நாவல் வெளிவந்தபோது அதன் வெளியீட்டுவிழாவுக்கு வந்திருக்கிறேன். அப்படி சில கூட்டங்கள்.

தமிழினி வெளியீடாக வரும் ‘இன்றைய காந்தி’ நூலின் ‘வெளியீட்டு’விழா ஈரோட்டில் ஜனவரி 24 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அதன் பின்னர் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 5 வரை நான் மலேசியா, சிங்கப்பூருக்கு ஒரு பயணம் செய்ய விருக்கிறேன். பிப்ரவரி இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பரீக்ஷா ஞாநி அவரது கேணி அமைப்பு சார்பில் சென்னையில் பேச அழைத்திருக்கிறார்.

ஆகவே பிப்ரவரி இறுதியில்தான் இப்போது வசதிப்படும். பிப்ரவரி மூன்றாம் வார சனி அல்லது ஞாயிறு நண்பர்களுக்கு வசதி என்றால் வைத்துக்கொள்ளலாம். பிப்ரவரி இறுதி ஞாயிறு என்றபோது பையன் வேண்டாம் என்கிறான். மார்ச் மாதம் ஒன்றாம் தேதி அவனுக்கு தேர்வு ஆரம்பிக்கிறது. ஒரு திகிலோடு இருக்கிறான்.

இந்த தேதி இல்லையென்றால் மார்ச் 20க்குப்பின் வைத்துக் கொள்ளலாம். அல்லது ஜனவரி முதல் அல்லது இரண்டாவது சனி ஞாயிறுகளில் வைத்துக் கொள்ளலாம். அதிக அவகாசம் இல்லை என்பது பரவாயில்லை என்றால் எனக்குப் பிரச்சினை இல்லை.

கூட்டத்தை இரு பகுதிகளாக நடத்தலாம். ஒருநாள் மாலை எல்லா வாசகர்களுக்காகவும் ஒரு ‘ஆசிரியரைச் சந்தியுங்கள்’ போன்ற நிகழ்ச்சி. அதாவது கேள்வி – பதில். அனைவருக்கும் அழைப்பு அனுப்பி பொதுவாக நடத்தலாம். மறுநாள் ஆர்வமுள்ள நண்பர்களை மட்டும் சந்திக்கும் ஓர் உரையாடல் நிகழ்ச்சி, அதை அறை நிகழ்ச்சியாக எங்காவது ஏற்பாடு செய்யலாம்.

நண்பர்கள் கூடிப் பேசித் தெரிவித்தால் நல்லது. சந்திப்போம்

ஜெ

Ref: http://www.jeyamohan.in/?p=6041

வாசகர் சந்திப்பு ஒரு கடிதம்

ஜெயமோகன் – வாசகர்கள் சந்திப்பு ஒரு கடிதம்

அன்புக்குரிய தோழர் ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

தங்களைப்போல், ஆழ்ந்த புலமையுள்ளோர் அதைக் காசாக்க நினைக்காமல், சக மனிதர்பால் பரிவும் நம்பிக்கையும் கொண்டு சீரிய ஆக்கங்களை வலைத்தளத்தில் சற்றும் சளைக்காமல் பதிவு செய்துவருவது சாலச்சிறந்த செயலாகும் – ஊர்நடுவே பழுத்த நிழல்தரும் மரம் தான் என் மனதில் தோன்றுகிறது.

அத்துடன், தங்கள் வலைத்தளமே ஒரு பொது மேடையாக உருவாகி பன்முகத்தன்மை கொண்ட செழுமையான கருத்துக்கள் வெளிப்படுத்துவதை நம்ப இயலாததொரு செயல்பாடாக வியப்புடன் நான் காண்கிறேன். தேர்ந்த நுட்பமும் கூரிய ஞானமும் தரும் செருக்கு சற்றுமின்றி, மிகச் சாமானிய கருத்துக்களுடனும், எள்ளல்களுடனும் மற்றும் ஏசல்களுடனும்கூட உரையாடித் தெளிவிக்கும் தங்களது பண்பு போற்றற்குரியது மட்டுமல்ல, பாடமாய்க் கற்றலுக்குமுரியது.

இக்கணத்தில் நான் தங்கள் முன் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் இதுபோன்றதொரு குழாம் தங்களுடன் நேரடியாக உரையாற்ற, தங்கள் உரைகேட்க, ஆண்டிற்கு ஓரிருமுறையேனும் ஒரு பொது அரங்கில் வாய்ப்பு அளிப்பீர்களா ? இது சாத்தியமல்ல என்று சுருக்குவதற்கு பதிலாக, சாத்தியக்கூறுகளுக்கு அவசியம் உண்டு என்று உணரும் பட்சத்தில், இதர தேவைகளை நாம் பங்கிட்டுச் சந்திக்கலாம். –ஜெயமோகன் ரசிகர் கூட்டம் சேர்க்கிறார் – என்ற வசையை எதிர்கொள்வது உங்களுக்கொன்றும் பெரிய கவலையளிக்கக்கூடியதொன்றல்ல. சற்றே யோசிக்கவும்.

– ஜேயார்ஸி

அன்புள்ள ஜேயார்ஸி

அப்படி ஒரு ஆலோசனையை வேறு சில நண்பர்களும் சொன்னார்கள். ஆனால் இத்தகைய நிகழ்ச்சிகளை என் செலவில் அமைக்கும் நிலையில் நான் இல்லை. செலவில்லாமல் இவற்றை அமைக்கவும் இயலாது. இதுவே முக்கியமான பிரச்சினை. இன்று தமிழ்நாட்டில் எங்கே சிலர் சந்திப்பதென்றாலும் அது செலவேறிய ஒன்றாகவே உள்ளது. ஏதேனும் வேறு சந்தர்ப்பங்களை ஒட்டி சாதாரணமாக சந்திப்புகளை உருவாக்க முடிந்தால் பார்ப்போம்.

ஜெ.

Ref: http://www.jeyamohan.in/?p=5712

%d bloggers like this: