பாலா: விஷ்ணுபுரம் விருது விழா 2013 சிறப்பு விருந்தினர்

விஷ்ணுபுரம் விருதுவிழா 2013ல் இயக்குநர் பாலா கலந்துகொள்கிறார்.

நான் கடவுளுக்காக பாலா பிரதீபா பட்டீலிடம் விருது வாங்கும் புகைப்படத்தைப் பார்த்து நான்கேட்டேன் ‘கண்ணப்பாத்தாலே தெரியுதே பாலா, ஜனாதிபதி விருதைக்கூட காலாள்படையா நின்னு வாங்கக்கூடாதா? குதிரமேல ஏறித்தான் போகணுமா?’

‘சேச்சே…குதிரைல்லாம் இல்ல’ என்று அவசரமாக மறுத்தார் பாலா. ‘இது வேற ….இது காத்து…வோட்காவுக்கு ஸ்மெல்லே கெடையாது…’

யோசித்துப்பார்க்கையில் அப்படி பாலா செல்வதுதான் இயல்பு என்று படுகிறது. இந்தியதேசியத்தின் உச்சியில் நிற்கும் ஒருவரின் முன் பாலா நிற்கையில் இந்தியாவின் கடைக்கோடிக் குடிமகன் ஒருவனின் மனசாட்சியின் குரல் அல்லவா அங்கே நிற்கிறது. கடவுள் முன்னால் ஆடுவதற்கு முன்னால் கொஞ்சம் மின்னலை விழுங்கிவிட்டு அரங்கேறும் நாட்டுப்புறக்கலைஞர்களை நாம் எவ்வளவு பார்த்திருக்கிறோம்

தமிழ்த்திரைப்பட வரலாற்றில் பாலாவின் இடம் மாற்றுக்கருத்தின்றி திரையுலகத்தவராலேயே அங்கீகரிக்கப்பட்டதாக உள்ளது. பாலாவின் சேது வெளிவந்தபோது அது உருவாக்கிய அதிர்ச்சியலைகளே அதை ஒரு வணிகவெற்றிப்படமாக ஆக்கின. ஒருபோதும் தமிழ் சினிமா பார்த்திராத ஓர் உலகைப் படமாக்கிக் காட்டியதுதான் அதை முக்கியமான படைப்பாக இன்றும் நிலைநிறுத்துகிறது. நம்முடைய ‘மனச்சமநிலைகொண்ட’ சமூகத்தால் ஒதுக்கப்பட்ட ‘மனநோயாளி’ களின் உலகத்தின் அதிரவைக்கும் ஓர் உலகு அதில் இருந்தது

அது ஒரு குப்பைக்கூடை. நம் நாகரீகம் பயன்படுத்தி கசக்கி எறிந்த மனிதக்குப்பைகள் அங்கே குவிந்துக்கிடந்தன. அந்த உண்மை நம் மனசாட்சியை உலுக்கியதனால் அப்படம் அழியாத ஒரு நினைவாக நீடிக்கிறது. அதுவே என்றும் பாலாவின் பேசுபொருள். மனிதநாகரீகத்தின் குப்பைக்கூடை. மனிதக்குப்பைகளின் கதை.

பாலாவின் அடுத்தபடம் நந்தா இன்றும் நினைக்கப்படுவது இரண்டு பெரும் குப்பைக்கூடைகளின் கதை அது என்பதனால்தான். சிறுவர்சீர்திருத்தப்பள்ளி, அகதிமுகாம். அவரது மூன்றாவது படம் பிதாமகனும் மனிதக்குப்பைகளின் கதையே. சுடுகாட்டில் வாழும் வெட்டியான்களின், கஞ்சா விற்பவர்களின், தெருப்பொறுக்கிகளின் உலகம் அது

நான் கடவுள் நாம் வாழும் உலகுக்கு மேலேயும் கீழேயும் உள்ள இரண்டு இருள்வெளிகளின் கதை. இரண்டும் சந்திக்கும் ஒருபுள்ளி அதன் உச்சம். சமூகத்தால் ஏழாம் உலகுக்கு அழுத்தப்பட்ட பிச்சைக்காரர்கள். ஞானத்தின் பொருட்டு தன்னை பிச்சைக்காரனாக ஆக்கிக்கொண்ட அகோரி. உண்மையின் இரு முகங்கள். இருவகை அன்னியர்கள்

அவன்இவன் படத்தில் மீண்டும் அந்த குப்பைக்கூடைக்குள்ளேயே துழாவினார் பாலா. அடித்தளத்துக்கும் அடித்தளத்தில் வாழும் மக்களின் நக்கலையும் கிண்டலையும் அந்தப்படம் வெளிக்காட்டியது. அந்த நக்கல் அவர்களின் ஆயுதம் மட்டுமல்ல, அவர்கள் தாங்கள் வாழும் வாழ்க்கையை நியாயப்படுத்திக்கொள்ளும் வழியும் கூட. ஆபாசமும் அருவருப்பும் கலந்த அந்த கிண்டல் வழியாக அவர்கள் மௌனமாக தங்களைச்சூழ்ந்திருக்கும் இருளையும் அழுக்கையும் கடந்துசெல்கிறார்கள்

பரதேசி பாலாவின் மிகச்சிறந்த படம். இது கூலியடிமைகளின் குப்பைக்கூடை. பசியால் துரத்தப்பட்டு அந்த அழுக்குக்குவியலுக்குள் விழுந்துகொண்டே இருக்கும் மக்களின் அவலம்.

தமிழ்சினிமாவின் வரலாறு என்றேனும் முழுமையாக எழுதப்படுமென்றால் இச்சமூகத்தின் இருண்டமூலைகளைப்பற்றி மட்டுமே சிந்தித்த இந்தக்கலைஞனின் தத்தளிப்பையும் தனிமையையும் பலங்களையும் பலவீனங்களையும் பற்றித்தான் முதன்மையாகப்பேசும் என்று நினைக்கிறேன். கலைப்படமரபென ஏதுமில்லாத தமிழில் வணிகசினிமாவின் இறுக்கமான விதிகளுக்குள் நின்றுகொண்டு தன் படைப்புலகு முழுக்க அத்தனை படங்களிலும் தன் தேடலை மட்டுமே முன்னெடுத்த இன்னொரு கலைஞனைப் பார்க்கமுடியாது.

இருண்ட அழகியலின் மரபென தமிழில் இப்போது வேறு ஏதுமில்லை, பாலா என்ற தொடக்கப்புள்ளி மட்டும்தான்

மீள்பதிவு: http://www.jeyamohan.in/?p=42684

தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது – தி இந்து செய்தி

award news on the hindu tamil
தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது – தி இந்து (தமிழ்) நாளிதழில் 18.12.2013 அன்று வெளியான செய்தி

ஜோ டி குரூஸுக்கு சாகித்ய அக்காதமி விருது 2013

இந்த வருட சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ள ”ஜோ டி குரூஸூக்கு” விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வாழ்த்துக்களைத்தெரிவித்துக் கொள்கிறது.

https://vishnupuram.files.wordpress.com/2013/12/23bd9-joe2bde2bcruz.jpg

ஜோ டி குரூஸ் விக்கி பக்கம்

சாகித்திய அகாதமி விருது 2013 பட்டியல்

ஜோ டி குரூஸுக்கு சாகித்ய அக்காதமி – ஜெயமோகன்

 

 

பாலசந்திரன் சுள்ளிக்காடு: விஷ்ணுபுரம் விழா 2013 சிறப்பு விருந்தினர்

விஷ்ணுபுரம் விருதுவிழாவில் இம்முறை மலையாளக்கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடு கலந்துகொள்கிறார்.

வரலாற்றில் அபூர்வமாக மிக இளம் வயதிலேயே சில கவிஞர்கள் ஒரு பண்பாட்டை நோக்கி பேச ஆரம்பிக்கிறார்கள். அப்பண்பாட்டின் முந்தையதலைமுறைகளிடம் பாரம்பரியத்திடம் இளையதலைமுறைக்கு என்னென்ன சொல்வதற்கிருக்கிறதோ அனைத்தையும் அவர்கள் வழியாக வெளிப்படுத்துகிறது காலம். அவ்வாறு விதியால் தேர்வுசெய்யப்பட்ட கவிஞன் ஒருவகையில் ஆசீர்வதிக்கப்பட்டவன், அவனுக்கு மரணமில்லை. இன்னொரு வகையில் சபிக்கப்பட்டவன், தன் காலகட்டத்தின் அனைத்து வலிகளையும் அவன் அனுபவிக்கிறான்.

உலக இலக்கியத்தில் அவ்வாறு இளமையின் அனலை குரலில் ஏந்தி வந்த பெரும்கவிஞர்கள் பலர் உண்டு. ஷெல்லியும் மயகோவ்ஸ்கியும் அவர்களில் உலகைநோக்கிப் பேசியவர்கள். இன்றும் குன்றாத இளமை ஒளியுடன் உலகக் கவிதையை ஆள்பவர்கள். மலையாளத்தில் அந்த வரிசையில் வைக்கத்தக்க பெரும் கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடு.

1957 ஆம் ஆண்டு பரவூரில் பிறந்தார். எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயிலும் போது ஜனநாயக வாலிபர் சங்கத்தில் ஈடுபட்டார். அங்கிருந்து நக்சலைட் இயக்கத்திற்குச் சென்றார். எழுபதுகளின் கொந்தளிப்பான அரசியலின் முகமாக அமைந்தன பாலசந்திரன் சுள்ளிக்காட்டின் கவிதைகள். கேரளமெங்கும் கல்லூரிகளில் அவரது கவிதைகள் பெரும் அலையை உருவாக்கின

நக்சலைட் இயக்கம் கொடூரமான முறையில் அரசால் ஒடுக்கப்பட்டதும் பாலசந்திரன் சுள்ளிக்காடு பலவகையான உளவியல் வதைகளுக்காளானார். ஜி.அரவிந்தன் இயக்கத்தில் பாலசந்திரன் சுள்ளிக்காடே நடித்து வெளிவந்த அவரது வாழ்க்கைக்கதையான போக்குவெயில் அந்த வதைகளின் வழியாகச் செல்லும் அபூர்வமான திரைப்படம்.

பாலசந்திரன் சுள்ளிக்காடு எழுதிய கவிதைகள் சந்தமும் ஆவேசமான ஒலியமைவும் கொண்டவை. பெரும்பாலும் மலையாளத்தில் வேரூன்றிய படிமங்கள் கொண்டவை. மேடைகளில் கவிதைகளை ஆவேசமாகச் சொல்லக்கூடியவர். அவரது சுயசரிதையான சிதம்பர நினைவுகள் தமிழில் கே.வி ஷைலஜா மொழியாக்கத்தில் வெளிவந்திருக்கிறது

இணைப்புகள்

பாலசந்திரன் சுள்ளிக்காடு ஒரு சித்திரம்– பிரிவின் விஷம் ஜெயமோகன்


பாலசந்திரன் சுள்ளிக்காட்டின் சிதம்பர நினைவுகள் ஹரன் பிரசன்னா


பாலசந்திரன் சுள்ளிக்காட்டின் ஒரு கட்டுரை

மீள்பதிவு: http://www.jeyamohan.in/?p=42665

இந்திரா பார்த்தசாரதி :விஷ்ணுபுரம் விருது விழா 2013 சிறப்பு விருந்தினர்

விஷ்ணுபுரம் விருதுவிழா 2013ல் இந்திரா பார்த்தசாரதி கலந்துகொள்கிறார். தமிழின் மூத்த பெரும்படைப்பாளிகளில் ஒருவர் இ.பா

இந்திரா பார்த்தசாரதி

நவீனத்தமிழிலக்கியம் உருவான நாள் முதல் அதற்கு ஒரு பொதுத்தன்மை இருந்தது. அதன் முன்னோடிப்பெரும்படைப்பாளிகள் ஏறத்தாழ அனைவருமே கிராமங்களை, அல்லது சிறுநகரங்களைச் சார்ந்தவர்கள். புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி போன்ற சிலர் முழுவாழ்க்கையையும் பெருநகரில் கழித்தவர்கள், ஆனால் பெருநகர் வாழ்க்கையை அவர்கள் எழுதவில்லை. பெருநகர்வாழ்க்கையைப்பற்றிய கிராமத்தானின் விலகலும் விமர்சனமுமே அவர்களின் படைப்புகளில் இருந்தது.

இன்னொருபக்கம் பெருநகர் வாழ்க்கையை எழுதியவர் அசோகமித்திரன். ஆனால் அவரது உலகம் பெருநகரின் அடித்தளமாக உள்ள நடுத்தவர்க்கம்தான். அவர்களின் சலிப்பூட்டும் சின்னஞ்சிறு வாழ்க்கை. பெருநகர் வாழ்க்கையின் அடையாளமாக உள்ள அதிகாரச்சிடுக்குகள், ஆடம்பரங்களின் விளையாட்டுகள், அறிவார்ந்த சிக்கல்கள் ஆகியவை அசோகமித்திரன் உலகில் இல்லை.

அந்தப்பெரும் இடைவெளி இந்திரா பார்த்தசாரதி என்ற முன்னோடியின் படைப்புகள் வழியாகவே தமிழில் நிரப்பப்பட்டது என்று சொல்லமுடியும்.தமிழின் முதல் பெருநகர்சார் வாழ்க்கையின் முகத்தை தன் வலுவான ஆக்கங்கள் மூலம் சித்தரித்தபடி தமிழில் நுழைந்த இந்திரா பார்த்தசாரதி பெரிதும் கவனிக்கப்பட்டது இந்த தனித்தன்மையினால்தான். இந்திரா பார்த்தசாரதியை தொடர்ந்து வந்த ஆதவன் அந்த மரபை வலுவாக முன்னெடுத்தார். ஆனால் ஆதவனுக்குப்பின் அத்தகைய எழுத்து தமிழில் தொடர்ச்சியற்றுப்போனது

டெல்லிதான் இந்திரா பார்த்தசாரதியின் களம். டெல்லியை இந்திரா பார்த்தசாரதி இரண்டு வகையான உதிர்பாகங்கள் கொண்ட மாபெரும் இயந்திரமாகப் பார்க்கிறார். ஒன்று அதிகாரத்தை நேரடியாகக் கையாளும் உயரதிகாரிகளும் அரசியல்வாதிகளும். இரண்டு, அவ்வதிகாரத்தின் பகுதியாகவும் அதேசமயம் அடிமையாகவும் இருந்து அதை ஒவ்வொருநாளும் பார்த்து வரும் குமாஸ்தா வர்க்கம். இவ்வொருசாராரின் மனத்திரிபுகளையும் நுட்பமான கிண்டல் வழியாக சித்தரிப்பவை இந்திரா பார்த்தசாரதியின் படைப்புகள். ஆரம்ப கட்ட நாவல்களான தந்திரபூமி, சுதந்திரபூமி போன்றவை மிகச்சிறந்த உதாரணங்கள்.

இந்திரா பார்த்தசாரதியின் நிரந்தரமான பேசுபொருளே அதிகாரம்தானோ என்ற எண்ணம் அவரது நூல்களை வாசிக்கையில் உருவாகும். அதிகாரம் உயர் வெப்ப உலை போல. அதனருகே செல்பவை எல்லாமே உருகி உருமாறிவிடுகின்றன. விதவிதமாக நெளிந்திருக்கும் மனிதர்களை அவரது புனைவுலகம் மெல்லிய புன்னகையுடன் காட்டுகிறது. குமாஸ்தாக்கள் உயர் அறிவுஜீவிகளாக ஆகி கொதார்த் ஃபெலினி என்று பேச ஆரம்பிக்கிறார்கள். கர்நடக சங்கீதத்தில் ஈடுபடுகிறார்கள். நான் குமாஸ்தா மட்டுமல்ல என்று தனக்கும் பிறருக்கும் நிரூபிக்கும் முகமாக. அதிகாரிகள் பெருந்தன்மை கொண்ட புரவலர்கள் ஆகிறார்கள். நான் அதிகாரி மட்டுமல்ல என்று காட்டுவதற்காக.

மனிதர்களின் பாவனைகளை அதிகமாகச் சொன்னவர் இந்திரா பார்த்தசாரதி. உணர்ச்சியற்ற அறிவார்ந்த ஆய்வுநோக்கு கொண்ட பார்வை அது. ஆகவே அவரது புனைவுகள் ஃப்ராய்டிய உளவியலுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்தன. கதைமாந்தரின் உளவியலை கதைக்குள்ளேயே அலசிச்செல்லும் எழுத்துமுறை. பின்னர் ஆதவன் அதை மேலும் முன்னெடுத்தார்

எழுபதுகளில் மெல்ல இந்திரா பார்த்தசாரதி இருத்தலியல் சிந்தனைகளை நோக்கிச் சென்றார். அறிவார்ந்த அங்கதம் மெல்ல அர்த்தமின்மை என்னும் தரிசனம் நோக்கிச் சென்றது. இந்திரா பார்த்தசாரதி இந்தக்காலகட்டத்தில் இதற்கான சிறந்த வடிவமாக நாடகம் நோக்கிச் சென்றார். தமிழ் நவீன நாடகத்தின் மூலவர்களில் ஒருவராக இந்திரா பார்த்தசாரதி கருதப்படுவது இந்நாடகங்கள் வழியாகவே. குறிப்பாக போர்வை போர்த்திய உடல்கள் தமிழின் மிகச்சிறந்த யதார்த்த நாடகம் என அன்றுமின்றும் கருதப்படுகிறது.

இந்திரா பார்த்தசாரதியின் பிற்கால நாவல்கள் நம் அரசியலின் அறவீழ்ச்சியை நோக்கிய அங்கதம் கொண்டவை. மாயமான் வேட்டை, வேதபுரத்து வியாபாரிகள் போன்றவை அவாது அங்கததரிசனத்தின் உதாரணங்கள்.

இணைப்புகள்

இபா கதைகள்

இபா கதைகள் தொகுப்பு


இபா கதைகள் ஓபன் ரீடிங் ரூம்

மீள்பதிவு: http://www.jeyamohan.in/?p=42671

%d bloggers like this: