ஆ. மாதவன் (A. Madhavan) 1934ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர். பள்ளி இறுதியுடன் படிப்பை விட்டுவிட்டு கடை வியாபாரத்துக்குச் சென்றுவிட்டவர். நாற்பத்தைந்து வருடங்களாகத் தொடர்ந்து சிறுகதைகள், நாவல்கள் எழுதிவரும் முக்கிய படைப்பாளி. ‘கிருஷ்ணப் பருந்து’ இவரது புகழ்பெற்ற நாவலாகும். மேலும்..
பூமணி – விஷ்ணுபுரம் விருது 2011
பூமணி (பிறப்பு – 1947, இயற்பெயர் – பூ. மாணிக்கவாசகம்.), மூத்த தமிழ் எழுத்தாளர் . இவரின் தந்தை பூலித்துரை, தாய் தேனம்மை. இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டி எனும் ஊரில் பிறந்தார். கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களைத் தனது எழுத்தில் வெளிப்படுத்திய சிறந்த எழுத்தாளர். பூமணி, கூட்டுறவுத் துறையின் இணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1971 ல் பூமணியின் முதல் சிறுகதை ‘அறுப்பு’ தாமரை இதழில் வெளிவந்தது. வெக்கை, வாய்க்கால்கள், வரப்புகள் முதலிய முக்கிய நாவல்களும், ’அம்பாரம்’ என்னும் சிறுகதைத் தொகுப்பு ம் வெளியாகியுள்ளன. இவரது சமீபத்திய நாவல் “அஞ்ஞாடி” 2012ல் வெளியாகி பரவலான கவனம் பெற்றது. மேலும்..
தேவதேவன் – விஷ்ணுபுரம் விருது 2012
தேவதேவன் என்ற புனைப்பெயரால் அறியப்பட்ட பிச்சுமணி கைவல்யம் ஒரு நவீனத் தமிழ் கவிஞர் . பிச்சுமணி கைவல்யம் என்றப் பெயரில் கதைகளையும் எழுதி வருகின்றார். இவர் எழுதிய “தேவதேவன் கவிதைகள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. கவிதைகள் எளிய சிக்கலில்லாத மொழிநடையைக் கொண்டவை. இயற்கைசார்ந்த படிமங்களை உள்ளொடுங்கிய தத்துவ நோக்குடன் சொல்பவை. அவரது சிறந்த கவிதைகளில் மென்மையான இசை ஒழுங்கு காணப்படும். நவீன வாழ்க்கையின் அழகின்மையையும் இலக்கின்மையையும் விமர்சிக்கும் தேவதேவன் இயற்கையின் பேரழகையும் அதன் சாரமான கருணையையும் மீண்டும் மீண்டும் முன்வைக்கிறார். மேலும்
தெளிவத்தை ஜோசப் – விஷ்ணுபுரம் விருது 2013
தெளிவத்தை ஜோசப் (சந்தனசாமி ஜோசப், பிறப்பு: பெப்ரவரி 16, 1934) ஈழத்தின் சிறுகதையாளர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர். இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர். அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர். சாதாரணத் தோட்டத்தொழிலில் அல்லாடிக்கொண்டிருக்கும் தொழிலாளிகளைப் போன்ற உதிரி மனிதர்களைப் பாத்திரங்களாகக் கொண்டவை இவரது படைப்புலகம். காலங்கள் சாவதில்லை என்பது இவருடைய முக்கியமான நாவல். நாமிருக்கும் நாடே சிறுகதைத் தொகுதிக்காக இலங்கைச் சாகித்திய விருது பெற்றுள்ளார். இவரது குடை நிழல் என்ற புதின நூல் 2010 ஆம் ஆண்டுக்கான யாழ் இலக்கிய வட்டம் – இலங்கை இலக்கியப் பேரவை விருதைப் பெற்றுள்ளது. மேலும்..