விஷ்ணுபுரம் விழா 2013 – வழக்கமான வினாக்கள்

விழாவை ஒட்டி வெளியான வசைகளுக்கு ஜெயமோகனின் விளக்கம்

Arch_20' x 3'_01(1)

01 Pillar_2.5' x 8'_0101 Pillar_2.5' x 8'_02

நாளை மறுநாள் [ டிசம்பர் 22 ] அன்று கோவையில் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. நான் நாளை [21] அன்று காலை கோவையில் வந்திறங்குகிறேன். சென்றவருடம் போலவே வரும் நண்பர்கள் தங்குவதற்கு ஒரு கல்யாணமண்டபம் ஏற்பாடாகியிருக்கிறது. குறைந்தவசதிகளுடன் கூட்டமாக பொதுக்கூடத்தில் தங்கி இரவெல்லாம் பேசுவதுதான் விஷ்ணுபுரம் விருதுவிழாவின் சிறப்பியல்பாக இதற்குள் ஆகிவிட்டிருக்கிறது. இம்முறையும் அதுவே

விழாவைப்பற்றி சென்றமுறையெல்லாம் வந்ததுபோன்ற வசைகள் வரவில்லையே , அது ஒருகுறையாகவே உள்ளதே என்ற ஆதங்கம் நண்பர்களுக்கெல்லாம் இருந்தது. அந்த வசைகள் வழியாகவே நாம் நம்மை நிரூபித்துக்கொண்டிருக்கிறோம். அந்தக்குறையை இம்முறை ஞாநி தீர்த்துவைத்திருக்கிறார். பேஸ்புக்கில் விஷ்ணுபுரம் விழா பெரும்பணக்காரர்களால் நடத்தப்படுவது என்றும் நான் பணக்காரர்களின் காலை நக்கிப்பிழைப்பவன் என்றும் அவர் எழுதியிருக்கிறார் என்று அறியவந்தது

ஒரே வரியில் சொல்லவேண்டுமென்றால் எல்லா வருடமும் எவரோ ஒருவர் இதைச்செய்கிறார். நாங்கள் எங்கள் தரப்பைச் சொல்ல ஒரு தருணமாகவே அதைப்பயன்படுத்திக்கொள்கிறோம். இம்முறை ஞாநி. ஞாநியின் தகுதிக்கு இச்சொற்கள் முறையானவை அல்ல என்று மட்டும் சொல்லவிரும்புகிறேன்.

நான் எழுதவந்த நாள்முதலே எனக்கு எழுத்துமூலம் குறிப்பிடும்படி வருமானமேதும் வந்ததில்லை. காரணம் நான் பெரிய ஊடகங்களேதிலும் எழுதியதில்லை. இப்போதும் என் நண்பர்களின் பதிப்பகங்களிலிருந்து நான் பணமேதும் பெற்றுக்கொள்வதில்லை.எனக்கு குறிப்பிடுமளவு பணம் வந்தது நான் மலையாளத்தில்லும் ஆங்கிலத்திலும் எழுதியபோதுமட்டுமே. அது நான் வீடுகட்டியநாட்களில் கடும் கடன்சுமையில் இருந்தபோது எழுத்தாளர்களுக்கு உதவ எப்போதுமே தாமாக முன்வரும் மலையாள மனோரமா குழுமம் செய்த உதவி.

அதன்பின் நான் மலையாளத்தில் எழுதுவதைக் குறைத்துகொண்டேன். புனைவுகள் எழுதவேகூடாது என எனக்கு நானே விதித்தும்கொண்டேன். என் தமிழ்நடை பாதிப்படையலாம் என்பதனால். ஆங்கிலத்தில் குறுகியகாலம் இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ஒரு தொடர் எழுதினேன். அதையும் நிறுத்திக்கொண்டேன்

அந்தப்பணமுடைநாட்களிலும்கூட 1996 முதல் 2008 வரையில் நான் வருடத்துக்கு சராசரியாக இரண்டு இலக்கியச் சந்திப்புகளை நடத்தியிருக்கிறேன். உணவு தங்குமிடம், செலவிடமுடியாதவர்களுக்கான பயணச்செலவு உட்பட அனைத்துச்செலவுகளையும் என் சொந்தச்செலவிலேயே செலவிட்டிருக்கிறேன். அலுவலகத்தில் இடைநிலை ஊழியராகப் பணியாற்றிவந்தபோதே அந்த மிகச்சிறிய வருமானத்துக்குள் அவ்வாறு தொடர்ந்து சந்திப்புகளை நடத்த முடிந்திருக்கிறது.

இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டு, விளைவாக அச்சந்திப்பு நிகழ்ச்சிகள் சற்றே பெரிதாக ஆனபின்னர் பங்கேற்பாளர்கள் செலவைப்பகிர்ந்துகொள்ளும் முறையைக் கொண்டுவந்தோம். காரணம் ஒருமுறை பங்கேற்பாளர்கள் தங்க இடமில்லாததனால் நானும் சிலநண்பர்களும் இரவெல்லாம் விழித்திருக்கவேண்டியதாயிற்று.இப்போதுகூட மிகக்குறைந்த செலவில் ஒவ்வொருவருக்குமான பங்கு மிகமிகக்குறைவாக இருக்கும்படி எளிமையாக அந்நிகழ்ச்சியை நடத்துகிறோம். மிக எளிய சைவ உணவு. மிகக்குறைவான தங்குமிட வசதிகள். தரையில் பாய்விரித்து கூட்டமாகப்படுத்துத்தான் தூங்கவேண்டும்.

இவற்றை முன்னரே சொல்லித்தான் பங்கேற்பாளர்களை அழைக்கிறோம். இலக்கியமீதான ஈடுபாடே அந்த வசதிக்குறைவுகளை பொறுத்துக்கொண்டு இத்தனைபேர் பங்கெடுக்கச் செய்கிறது. இந்நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கவிரும்பும் பணவசதி குறைவான நண்பர்களின் செலவுகளை நாங்களே ஏற்றுக்கொள்வதனால் எனக்கும் நண்பர்களுக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கணிசமான செலவு ஏற்படுகிறது

விஷ்ணுபுரம் விருது அளிக்கப்படுவதற்கான காரணம் அனைவரும் அறிந்ததே. இயல்விருது ஆரம்பிக்கப்பட்டபோது அதன் மீது எனக்கு பெரும் நம்பிக்கை இருந்தது. அதில் ஒரு கொள்கையளவு பங்களிப்பும் எனக்குண்டு. விருதுபெறாமல் புறக்கணிக்கப்பட்ட முக்கியமான முன்னோடிப் படைப்பாளிகளுக்கு அவ்விருது அளிக்கப்படவேண்டும் என்றுதான் உத்தேசிக்கபபட்டது.

ஆனால் அதன் பல்கலைக்கழக தொடர்பு காரணமாக கல்வியாளர்கள் அதை கையகப்படுத்தி தங்களுக்குள்ளேயே விருதுகளை கொடுத்துக்கொள்ளும் வழக்கமான செயலை ஆரம்பித்தனர். கடைசியாக லட்சுமி ஆம்ஸ்ட்ரம் என்ற மிகச்சாதாரணமான மொழிபெயர்ப்பாலருக்கு விருது அளிக்கப்பட்டது.

அதை நான் மிகக் கடுமையாக கண்டித்தேன். புறக்கணிக்கப்பட்ட பெரும்படைப்பாளிகள் கௌரவிக்கப்படவேண்டும், அதற்காக இன்னொரு விருதை உருவாக்கவேண்டும் என்று உலகவாசகர்களுக்கு கோரிக்கை வைத்தேன். பலர் என்னிடம் அதைப்பற்றிப்பேசினர். பெரும் நிதி அளிக்கவும் பலர் தயாராக இருந்தனர். நான் எவரிடமும் பணம்பெறத் தயாராக இருக்கவில்லை. பரிசுகளை அவர்களே கொடுக்கவேண்டுமென விரும்பினேன்.

இயல்விருது அப்போது தன் பிழைகளை திருத்திக்கொண்டு மீண்டும் சாதனையாளர்களான படைப்பாளிகளுக்கும் அறிஞர்களுக்கும் விருதுகளை அளிக்க ஆரம்பித்தது. இன்று தமிழின் பெருமதிப்புக்குரிய விருது அது. கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், அம்பை, எஸ்.பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன் போன்றவர்களுக்கு விருதை அளித்து அந்த கௌரவத்தை அது அடைந்தது.

இயல் சார்பில் ஞானி ஐராவதம் மகாதேவன் ஆகியோரை கௌரவிக்கவும் எஸ்.பொ அவர்களுக்கு விருதளிக்கவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. என்னைப்பொறுத்தவரை அதெல்லாம் பெரும் கௌரவம். என் முன்னோடிகள் முன் அவர்களுக்கான அங்கீகாரத்துடன் நிற்கையில்தான் நான் மிகப்பெரும் விருதொன்றை பெறுவதாக உணர்கிறேன். அதற்காக இயல் அமைப்புக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்

ஆகவே இன்னொரு விருதை உருவாக்கும் முயற்சி அப்போது கைவிடப்பட்டது. பின்னர் நண்பர்களுடன் அதைப்பற்றிப் பேசும்போது விருதை ஏன் நாமே கொடுக்கக்கூடாது என்று ஒரு பேச்சு எழுந்தது. அவ்வாறுதான் விஷ்ணுபுரம் விருது ஆரம்பமாகியது. இயல்விருதுக்கு பலமுறை பரிந்துரைக்கப்பட்ட ஆ.மாதவனுக்கு முதல் விருது என முடிவுசெய்தோம். ஆ.மாதவன் பெற்ற முதல் விருது அது என்பது மட்டுமல்ல அவருக்காக நிகழ்த்தப்பட்ட ஒரே இலக்கியக்கூட்டமும் அதுதான். நம் யதார்த்தவாத எழுத்தின் முன்னோடிக்கு அந்த ஒரே அங்கீகாரம் மட்டுமே கிடைத்துள்ளது என்பதே அந்த விருதின் முக்கியத்துவத்தை உணர்த்தும்

விஷ்ணுபுரம் விருதை என்னுடைய சொந்தப்பணத்தில் இருந்துதான் கொடுக்க ஆரம்பித்தேன். அதற்கு நான் சினிமாவில்பெறும் ஊதியத்தில் ஒருபகுதியை செலவிடுகிறேன். ஆனால் விருதுவழங்கும் நிகழ்ச்சி மெல்லமெல்ல பெரிய ஒரு விழாவாக ஆகிவிட்டது. இரண்டாவது முறை தங்குமிடம் போதுமானதாக இல்லாமல் நானும் பல நண்பர்களும் இரவெல்லாம் பேசியபடி கோவை நகரைச் சுற்றிவந்த அற்புதமான அனுபவமும் ஏற்பட்டது.

ஆகவே விஷ்ணுபுரம் குழுமத்தைச் சேர்ந்த நாலைந்து நண்பர்கள் மட்டும் செலவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். எல்லா நண்பர்களும் இதில் நிதியளவில் பங்களிப்பாற்றுகிறார்கள் என்பதே உண்மை. எவரும் பெரிய நிதி எதையும் அளிக்கவில்லை. இப்போதும் பெரும்ம்பகுதி என்னுடைய பணம்தான்.

இச்செலவுக்காக சென்றவருடம் முதல் ஒரு கொள்கையைக் கடைப்பிடித்துவருகிறேன்.நான் கல்லூரிகள் போன்ற அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதென்றால் விஷ்ணுபுரம் அமைப்புக்கு குறைந்தது 5000 ரூபாயாவது அளிக்கவேண்டும் என்பது. சென்றவருடம் பங்கேற்ற ஐந்து நிகழ்ச்சிகள் வழியாக கிடைத்த பணமும் இந்நிகழ்ச்சிகளுக்கு உதவுகிறது.

இன்றும் நன்கொடைகள் அளிக்க பலர் தயாராக உள்ளனர். என்றும் எனக்கு பணம் ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை. நான் என் நேர்மையை என்றும் வெளிப்படையாக வைத்திருப்பவன். ஒரு தேவை என்றால் எந்த நிதியையும் என்னால் புரட்ட முடியும். பலமுறை இதயநோயுற்ற நண்பர்களுக்காக , நலிந்த எழுத்தாளர்களுக்காக நிதி திரட்டியிருக்கிறேன். ஈழப்போராட்டத்தின்போது பாதிக்கப்பட்ட நண்பர்களுக்காக நிதி திரட்டியிருக்கிறேன். நண்பர்கள் அதை அறிவர். திட்டமிட்ட பணத்தை மட்டும் என் மீது நம்பிக்கை உடைய நண்பர்களிடமிருந்து மட்டும் பெற்றுக்கொள்வது என் வழக்கம்.

இன்றும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் தேவையான எவ்வளவு நிதியை வேண்டுமென்றாலும் மிகச்சுலபமாக என்னால் திரட்டமுடியும். ஆனால் நிதி திரட்டி அமைப்புகளை உருவாக்குவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. திரைத்துறையிலும் வெளியிலும் விஷ்ணுபுரம் அமைப்புக்கு நிதியளிக்க முன்வந்தவர்கள் பலர். நான் வேண்டாம் என்றே சொல்லியிருக்கிறேன்.

குறிப்பாக இன்று நிகழ்ச்சி பெரியதாக ஆகிவிட்டிருப்பதனால் தாங்களகாவே விளமபர நன்கொடை அளிக்க நிறுவனங்கள் முன்வந்தன. இப்போதைக்கு பெரிய திட்டங்களேதும் எங்களிடம் இல்லை. பொதுப்பணத்தைப்பெற்றுக்கொண்டோமென்றால் அது பெரிய பொறுப்பும்கூட. ஆகவே அதைத் தவிர்த்துவிட்டோம். இப்போதைக்கு நெருக்கமான நண்பர்களின் கொடைகள் மட்டுமே பெறப்படுகிறது. பெரிய நன்கொடைகளுக்குப்பதில் அனைவரும் பங்களிப்பாற்றும் நோக்குடன் செலவைப்பகிர்ந்துகொள்ளும் முறையை மட்டுமே கடைப்பிடிக்கிறோம்.

இக்காரணத்தால்தான் ஜெயமோகன்.இன் தளத்தில் விளம்பரங்களையும் நாங்கள் வெளியிடுவதில்லை. இதற்கான செலவுகள் சிறில் அலெக்ஸ் , ஆனந்தக்கோனார் ஆகியோரால் செய்யப்படுகின்றன.

அவதூறாளர்களின் மனநிலையைக் கூர்ந்து கவனித்துவருகிறேன். அவர்களால் ஒரு விஷயம் தன்னலமில்லாமல் நிகழ முடியும் என்பதை நம்பமுடியவில்லை. நட்பும் பரஸ்பர மதிப்பும் கொண்ட சிலர் கூடிச் செயல்படமுடியும் என்பதையே ஏற்கமுடியவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு அத்தகைய விழுமியங்களில் அறிமுகமே இல்லை. அவர்களை எண்ணி வருந்துவதைத்தவிர வேறு வழியே இல்லை.

எல்லா வழிகளிலும் இந்தக்கூட்டமைப்புக்குள் உள்ள நண்பர்களிடையே பேதம் விளைவிக்க முயல்கிறார்கள். பொய்யான தகவலகளை பரப்புகிறார்கள். புறம்கூறுகிறார்கள். மனத்திரிபுகளை உருவாக்க முயல்கிறார்கள். இந்த உழைப்பில் கால்வாசியை சிந்திப்பதற்கோ எழுதுவதற்கோ இவர்கள் செலவிட்டால் தமிழில் எவ்வளவு நல்ல படைப்புகள் வந்து சேரும். ஏன் இந்த அவஸ்தை? பரிதாபம்தான்.

இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் எதிலும் நான் எந்தப்பங்களிப்பையும் ஆற்றவில்லை. நண்பர்களே முன்னின்று செய்கிறார்கள். அவர்களின் கூட்டான கடும் உழைப்பு ஆச்சரியத்தை அளிக்கிறது. இங்கே இன்னும் எவ்வளவோ விஷயங்கள் செய்யமுடியும் என்ற நம்பிக்கையையும் அளிக்கிறது. இந்நிகழ்ச்சியின் ஒட்டுமொத்தமான அமைப்புடனும் வீச்சுடனும் ஒப்பிட்டால் இதற்கான செலவு மிகமிகக் குறைவாக இருக்கக் காரணம் இந்நண்பர்களே. [பெயர்களைச் சொல்லவே பயமாக இருக்கிறது. அவர்கள் மேல் வசைமழை ஆரம்பித்துவிடும்] அனைவருமே பல்வேறுதுறைகளில் வேலைபார்ப்பவர்கள். எளிய நடுத்தரவர்க்க வாழ்க்கை கொண்டவர்கள். இந்நிகழ்ச்சியின் மூலம் அவர்கள் அடையும் நிறைவே அவர்களுக்கான லாபம் என நினைக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை என் மீதான நட்பு காரணமாகவே நண்பர்கள் ஆரம்பித்தனர். ஆனால் இன்று அது வளர்ந்து அவர்களுக்கிடையேயான நட்புப்பரிமாற்றமாக வளர்ந்துள்ளது. நான் விரும்பியது இந்தப்பரிணாமத்தை மட்டுமே. மிகுந்த மனநிறைவுடன் நண்பர்களை இத்தருணத்தில் நெஞ்சாரத் தழுவிக்கொள்கிறேன்.

 


இயல்விருது சில வினாக்கள்


இயல்விருதின் மரணம்


உலகத்தமிழ்வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள்!

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: